சேலம்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வரும் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் தர்பார் படத்தை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி அனுமதி வழங்குமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
லைக்கா புரொடக்ஷனின் பிரமாண்டமான தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் தர்பார்.
படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - அனிருத். ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்.
படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் தர்பார் திரைக்கு வரவுள்ளது.
இதையடுத்து இந்தப் படம் வெளியாகும் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டரில் மலர் தூவி அனுமதி வழங்குமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில், சேலம் மேற்கு வட்டம் மெய்யனூர் கிராமம், ஏஆர்ஆர்எஸ் திரையரங்கில் தர்பார் திரையிடப்படவுள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ அனுமதி வழக்குமாறு கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஜினிகாந்தின் 'கபாலி' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக விமானத்தில் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு பறக்கவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ரஜினியின் புதிய படமான தர்பார் படத்தை வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவும் புதிய முயற்சியை ரசிகர்கள் கையில் எடுத்துள்ளனர்.