சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்படிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் அருங்காட்சியகத்தில் படப்படிப்பு நடத்த அனுமதி கேட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நிர்வாக தயாரிப்பாளர் செந்தில் காவல் ஆணையரிடம் கடிதம் ஒன்றை வழங்கினார்.
ஆனால் படப்படிப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக கரோனா பரவல் காரணம் காட்டியும், அரசு இடத்திற்குள் சினிமா படப்படிப்பு நடத்த அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருவதால் பொது இடத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட அனைத்து விதமான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற சூழலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்க இயலாது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர் அனுமதி மறுப்பு முன்னதாக சமூக வலைதளங்களில் படபிடிப்பிற்கு காவல் துறையினர் சிலர் பணம் பெற்று கொண்டு அனுமதி வழங்கியதாகவும், பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'விக்ரம்' மூன்றாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?