பாலிவுட் சினிமாக்களைப் போல் டோலிவுட்டிலும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகிவருகிறது. நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாறாக வெளிவந்த மகாநடி, மறைந்த முதலமைச்சர்ர் நடிகர் என்.டி. ராமராவ் வாழ்கை வரலாறாக என்.டி.ஆர். கதாநாயகடு, என்.டி.ஆர். மகாநாயகடு ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ஜார்ஜ் ரெட்டி என்ற படம் உருவாகியுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சி மாணவராக படித்த ஜார்ஜ் ரெட்டி, கல்லூரி வளாகத்துக்குள் நடக்கும் அரசியலை எதிர்த்து மாணவர்களின் உரிமைக்காகப் போராடிய எழுச்சிப் போராளியாகத் திகழ்ந்தார். மார்க்சிய சிந்தனையை மாணவர்கள் மத்தியில் விதைத்ததுடன் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுத்தருவது என மாணவர்களின் தலைவனாக வலம்வந்தார்.
முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கத்தை தொடங்கிய இவர், அதன்மூலம் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்த செய்யும் பணிகளை மேற்கொண்டார். படிப்பிலும் சிறந்த விளங்கிய இவர், ஒரு குத்துச்சண்டை வீரரும் கூட.