பிரித்வி ராஜ், பிஜு மேனன் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மலையாளத் திரைப்படம் 'அய்யப்பனும் கோஷியும்'.
சச்சி இயக்கத்தில் வெளியான இந்தப் படம், இரு நபர்களுக்கு இடையே தோன்றும் சிறு பிரச்னை, அதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே பூதாகரமாக உருவெடுக்கும் மோதல்கள் என இரு நபர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னைகளை மையப்படுத்தி அமைந்திருக்கும். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் பெரும் வரவேற்புகளைப் பெற்றது.
இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது பிரித்வி ராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்தில் ராணா நடிக்கவிருப்பதை அப்படக்குழு உறுதி செய்துள்ளது.
இது குறித்து, தங்களின் பயணத்தில் இணையும் பலம்வாய்ந்த பல்வாழ் தேவனை வரவேற்பதாகக்கூறி படக்குழு வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சாகர் கே. சந்திரா இயக்குவது குறிப்பிடத்தக்கது.