தெலுங்கில் ரீமேக்காகும் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' - ஒத்த செருப்பு தெலுங்கு ரீமேக்
’ஒத்த செருப்பு’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர், இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இந்தப்படத்தின் சிறப்பு என்னவென்றால் பார்த்திபன் தனி ஆளாக நடித்து புதிய முயற்சியை மேற்கொண்டார் .
ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே தோன்றும், இந்தப் படம் உலக அளவில் வெளியான சோலோ கேரக்டர் படங்களில் 13ஆவது படமாக வெளிவந்தது.
அந்த பன்னிரெண்டிலும் இல்லாத சிறப்பு ஒத்த செருப்பில் இருக்கிறது. எழுத்து, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பார்த்திபன் ஒருவரே அதனை நிகழ்த்திக் காட்டினார்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில், 'ஒத்த செருப்பு' திரைப்படம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்தியில் பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் இப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில், சென்னையில் தொடங்கியது. தற்போது தெலுங்கில், வெங்கட் சந்திரா இயக்கத்தில், கணேஷ் பண்ட்ல நடிக்கிறார். இப்படத்தை யாஷ்ரிஷி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.