விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதோடு, காதல் சடுகுடு, ஏய், தோரணை உள்ளிட்ட 25 திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
மதுரை பரவை பகுதியில் தனது மகன் வீட்டில் வசித்து வரும் இவர், வயது முதிர்வு காரணமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருதயக் கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மாவை 'பட்டதாரி' திரைப்பட நடிகர் அபி சரவணன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். கூடவே, அவருக்குத் தேவையான மருத்துவ செலவையும் ஏற்பதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, பரவை முனியம்மாவுக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக அபி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து, அபி சரவணன் நேரில் சென்று பரவை முனியம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்துள்ளார். தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மருத்துவ செலவை ஏற்பதாகக் கூறினார்.
மேலும், பரவை முனியம்மா சிகிச்சை பெற்று குணமாவது வரை அனைத்து செலவையும் இலவசமாக பார்த்து கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.