தமிழ் சினிமாவில் வசதியான ஆடம்பர வாழ்க்கை என்பது ஸ்டார் நடிகர், நடிகைகளுக்கு மட்டும்தான். நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களாக நடித்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், உண்மையில் பல குணச்சித்திர நடிகர்களின் இறுதி வாழ்க்கை மிக சோகமாகவே இருக்கிறது.
அந்த வகையில், பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாவின் கதையைக் கேட்டால் கண்ணீருடன் சோகம் தொற்றிக் கொள்ளும். கடந்த 2003ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த "தூள்' படத்தில் 'மதுரை வீரன் தானே' என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பரவை முனியம்மா. இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தொடர்ச்சியாக காதல் சடுகுடு, தேவதையைக் கண்டேன் என 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இவர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு பாடலைப் பாடி அசத்தினார். இவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அந்த படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் இவர் பாட்டு பாடிக்கொண்டே கிராமத்து சமையலை சமைத்து பார்வையாளர்களின் இதயத்தை தொட்டவர் இன்று யாரும் பார்க்க முடியாத நிலையில் இருப்பது மன வேதனையைத் தருகிறது.