தென் கொரியாவைச் சேர்ந்த இயக்குநர் போங் ஜோன் ஹோ இயக்கியுள்ள படம் 'பாராஸைட்'. இந்தத் திரைப்படம் ஹாலிவுட் திருவிழாவான ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில், சிறந்த இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது. 92 வருட ஆஸ்கர் விழாவில் ஆங்கிலம் அல்லாத வேற்று மொழித்திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றது இதுவே முதல் முறை.
இதையடுத்து, இப்படம் பிரிட்டிஷ் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி பிரிட்டிஷில் வெளியான 'பாராஸைட்' தற்போது வரை $ 14.59 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.
இதற்கு முன் 2004ஆம் ஆண்டு மெல் கிப்சன் இயக்கத்தில் எபிரேய - லத்தீன் மொழி உரையாடலை கொண்டிருந்த 'தி பேஷன் ஆஃப் தி கிறிஸ்ட் (The Passion of the Christ)' திரைப்படம் $ 14.56 மில்லியன் டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்திருந்தது.
இது குறித்து 'பாராஸைட்' படத்தின் விநியோகஸ்தர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட போங் ஜோன் ஹோ இயக்கிய பாராஸைட் இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில், அதிக வசூல் செய்த வெளிநாட்டு மொழிப்படமாக மாறியுள்ளது என்றனர். இதுவரை இப்படம் உலகம் முழுவதும் $ 257மில்லியனுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் வாசிங்க: ட்ரம்ப்பின் கருத்தால் ஆத்திரமடைந்த ‘பாரசைட்’ இயக்குநர்