நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கன்னிமாடம்'. இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி எனப் புதுமுகங்கள் நடித்திருக்கும் 'கன்னிமாடம்' மதுரை அருகேயுள்ள மேலூரைக் கதைக்களமாகக் கொண்டு காதல், சாதி, எமோஷன் கலந்த கலவையாக அமைந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம், நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
'கன்னிமாடம்' படத்தைப் பார்த்த திருமாவளவன் கூறுகையில், “சாதி, மத வன்முறை தலைகுனிய வைக்கக்கூடிய அளவுக்கு இன்று பெருகிவருகிறது. பெரியார், அம்பேத்கர் சிந்தனையைக் கொண்டுசேர்க்கும் படம் கன்னிமாடம்.
சாதிவிட்டு சாதி காதல் மலர்வது என்பது சமூகத்தின் இயங்கியல் போக்கில் இயல்பானது. அதை எதிர்க்கக் கூடியவர்கள் எப்படியான மனநோயாளிகள் என்பதை இப்படம் காட்சிப்படுத்துகிறது.
இந்தப் படத்துக்கு விருது கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும் சமூக மாற்றத்தை உருவாக்கும் படமாக அமைந்துள்ளது. இன்றைய திரைப்படங்கள் சமூக உரையாடலை உருவாக்குகிறது. பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்” என்றார்.
தற்போது இப்படத்தைப் பார்த்த பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாகப் பாரட்டியுள்ளார். அதில், "கன்னிமாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல் ஆணவக் கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாகக் காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் போஸ்வெங்கட் அவர்களுக்கும் & அத்திரைப்பட குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.