யாழி, நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுத்தாளர் ஜி. ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.
கலையரசன் நாயகனாகவும், அஞ்சலி பாட்டீல் நாயகியாகவும் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 14) சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. பா. இரஞ்சித் இசைத் தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
தன்னிச்சை படைப்பாளிகள் மீது நம்பிக்கை
அப்போது பா. இரஞ்சித் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பல வகைகள் இருக்கு, அதைப் பார்த்துதான் சினிமாவுக்கே நான் வந்தேன். பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களைப் பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான்.
ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன். அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். தத்தோஷ்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவருடைய படங்களைப் பார்த்து மெய் மறந்து நின்றிருக்கிறேன்.
அதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. ஆனால், அவருடைய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுபோன்ற ஒரு ரசிகராகத்தான் நான் மனோஜை பார்க்கிறேன். ஜெனி மூலமாக மனோஜ், அவருடைய குழுவைச் சந்தித்தேன். அப்போது ராஜேஷ் நான்கு மணி நேரம் கதை சொன்னார்.