நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 'அகரம் ஃபவுண்டேசன்' சார்பாக கிராமங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சென்னையில் அகரம் ஃபவுண்டேசன் சார்பாக பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கையால் கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் அதிக ஆபத்துகளே உள்ளன. ஆசிரியர்களே இல்லாத மாணவர்கள் எவ்வாறு நீட் தேர்வு எழுதுவார்கள். கஸ்தூரி ரங்கன் குழு பள்ளிகளை மூடுவதற்கான அறிக்கையை வெளியிட இருக்கிறது. காளான்கள் போல் தனியார் பயிற்சி மையங்கள் உருவெடுக்கும். இதனை கை கட்டி வேடிக்கை பார்க்காமல் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்" என்று உச்சக்கட்ட கோபத்துடன் கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூர்யா அரைவேக்காடுத்தனமாக பேசுகிறார் என்றும், சூர்யா நடிக்கும் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? என்று பாஜக மாநில தலைவர் தமிழிசையும், வன்முறையை தூண்டும் விதத்தில் சூர்யா பேசுகிறார் என்று ஹெச்.ராஜாவும் கடுமையாக தாக்கி பேசியிருந்தனர்.
தற்போது சூர்யா பேசியது சமூக வலைதளம், ஊடகங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் நடிகர் சூர்யாவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் உட்பட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் பா.இரஞ்சித், சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் @Suriya_offl நாம் துணை நிற்போம்!" #StandWithSuriya' என்று பதிவிட்டுள்ளார்.