நடிகர் விமல், ஓவியா நடிப்பில் வரும் மே 4ஆம் தேதி வெளியாக இருந்த படம் 'களவாணி 2'. இப்படத்தை, அதன் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் சற்குணமே இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்ற ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மெரினா பிக்சர்ஸுக்கு வழங்க மூன்று கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது.
ஆனால், ஒப்பந்தத்தை மீறி படத்தின் உரிமையை கியூப் நிறுவனத்திற்கு மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், 'களவாணி 2' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 10-ம் தேதி வரை 'களவாணி 2' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இது குறித்துப் பேசிய இயக்குநர் சற்குணம், "தடை வாங்கிய நிறுவனத்திற்கும், எனக்கும், தயாரிப்பாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன் தடை வாங்கினீர்கள் என போன் செய்து கேட்டதற்கு 'இது நடிகர் விமல் பற்றிய பிரச்னை' எனக் கூறினார்கள். நீதிமன்றம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நல்ல தீர்வு தருவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.