சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை நடைபெற்ற நிலையில், அதிக வாக்குகள் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (நவ. 21) நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கி உள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை.
முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாரயணன், தயாரிப்பாளர் தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பி.எல்.தேனப்பன் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிட்டார்.
தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் ஆயிரத்து 50 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாரயணன் 557 வாக்குகள் பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக டி. ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சுயேச்சையாக போட்டியிட்ட பி.எல்., தேனப்பன் 87 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இதில், 69 வாக்குகள் செல்லாத வாக்குகளானது.