தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ் சினிமாவை குறி வைக்கும் ஓடிடி நிறுவனங்கள்! - திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன

சென்னை: முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் ரூ.800 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

OTT
OTT

By

Published : Feb 16, 2021, 6:08 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் திரையுலகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக திரையரங்குகள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இன்னும் பெரும்பாலான இடங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இதற்கு கரோனா ஒரு காரணமாக இருந்தாலும் கரோனாவை காரணம் காட்டி உள்ளே நுழைந்த ஓடிடி தளங்களும் ஒரு காரணமாக அமைந்தன.

திரையரங்குகள் மூடப்பட்டதாலும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த காரணத்தாலும் ஓடிடி தளங்கள் அதிக அளவில் உருவாகின. திரையரங்குகளில் வெளியிட முடியாத படங்களை விலைக்கு வாங்கி தங்களுடைய தளங்களில் வெளியிட்டு லாபம் பார்த்தன. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டு படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. அவையும் ரசிகர்கள்களை திருப்திபடுத்தவில்லை.

இதனால் என்ன செய்வதென்று திகைத்து நின்ற ஓடிடி தளங்களுக்கு புத்துயிர் பாய்ச்சியது சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம். இந்தப் படத்தின் வெற்றி ஓடிடி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்தது. இதனால் அடுத்தடுத்து 'பூமி', 'மூக்குத்தி அம்மன்' போன்ற பெரிய படங்களையும் வாங்கி வெளியிட்டன.

இந்நிலையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு இந்தாண்டு பொங்கலுக்கு விஜயின் 'மாஸ்டர்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படமும் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றது. இதனுடன் வந்த சிம்புவின் 'ஈஸ்வரன்' படம் முதலில் திரையரங்கு ரிலீஸ் என்று சொல்லி திடீரென அதே நாளில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தெரிவித்தார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

ஆனால் 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியான சில தினங்களிலேயே ஓடிடியில் வெளியானது. இதுவும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தமிழ் திரைப்படங்களை வாங்கி வெளியிடவும் படங்களை தயாரிக்கவும் தமிழ் இணைய தொடர்களை தயாரிக்கவும் ரூ.800 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வரும் காலங்களில் திரையரங்குகளை விட ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஓடிடியில் மாஸ்டர் - திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details