தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கர் விருது: ஆதி முதல் அந்தம் வரை - பகுதி II - abhishek raja

ஹாலிவுட்டின் பிரம்மாண்டத் திருவிழாவான 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் பிப்ரவரி 25ம் தேதி டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ளது. உலகில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட விருது வழங்கும் விழாவாக ஆஸ்கர் திருவிழா இருக்கப்போவதாக கூறப்படுகிறது.

oscar

By

Published : Feb 3, 2019, 10:12 PM IST

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்ட ஆஸ்கர் விருது, அநேக சரித்திர நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது.
"நான் மோஷன் பிக்சர் தொழிலில் என் இனத்தின் அடையாளமாக என்றைக்கும் நிலைத்திருப்பேன் என நம்புகிறேன்" என 51 வயதான ஹட்டி மெக்டானியேல் மேடையில் கூற, அந்த வரலாற்று புகழ்மிக்க நிகழ்வை ஆர்ப்பரித்து மகிழ்ந்தது 12வது ஆஸ்கர் விழாவின் அரங்கம்.

ஹாலே பெர்ரி

"கான் வித் தி வின்ட்" (gone with the wind) என்ற படத்தில் கதாநாயகியின் பணிப்பெண்ணாக நடித்து 1940ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர வேடத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று, ஆஸ்கர் விருதினை பெற்ற முதல் கறுப்பினப் பெண் என்ற வற்றா புகழ்பெற்றார் ஹட்டி மெக்டானியேல். 40களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தபோது ஆஸ்கர், ஹட்டி மெக்டானியேலின் திறமைக்கு விருந்தளித்து உச்சி முகர்ந்தது.

இது நடந்து 25 ஆண்டுகள் கழித்து 1964 ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை ஆப்ரோ அமெரிக்கரான சிட்னி போய்டியருக்கு வழங்கி கவுரவித்தது ஆஸ்கர். அதுவரை கரைகளற்ற வெள்ளைத் தோலுடன் உருவாக்கப்பட்ட ஹாலிவுட்டின் ஹீரோ பிம்பம் இந்நிகழ்வால் உடைக்கப்பட்டது. நிற, இன பாகுபாடுகள் தாண்டி திறமையை மட்டுமே அங்கிகரிக்கும் மேடையாக அன்று காட்டிக்கொண்டது ஆஸ்கர்.

ஹட்டி மெக்டானியேல்

இதன் பிறகு எத்தனையோ திறமையான கறுப்பின கலைஞர்கள் வந்து, மக்களின் அபிமானத்தை பெற்றனர். அமெரிக்காவில் நிறவெறி மார்டின் லூதர் கிங்கின் வருகைக்கு பிறகு படிப்படியாக குறைந்தபோதும், அகாடமி மற்றோரு கருப்பினத்தவரை சிறந்த நடிகர் நடிகையாக தேர்ந்தேடுக்கவேயில்லை. ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட 51 ஆண்டுகள் ஆனது. மற்றோரு கருப்பின ஹீரோ ஹீரோயினை தேர்ந்தேடுக்க!!

நீண்ட இடைவேளைக்கு பிறகு 2002 ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை டென்சல் வாஷிங்டன்க்கும்,சிறந்த நடிகைக்கான விருதை ஹாலே பெர்ரிக்கும் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அதற்கு பின் இன்று வரை ஒரு நடிகைக்கு கூட சிறந்த நடிகை விருதை அளிக்கவே இல்லை.

சிட்னி போய்டியர்

'நான் நிரந்தரமானவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!'- என கண்ணதாசனின் வரிகளை போல் கலைஞன் தன் கலையினுடாய் காலத்தை வென்றுவிடுகிறான்.

2009 ம் ஆண்டு ஹாலிவுடின் புகழ்பெற்ற இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் 'டார்க் நைட்(dark knight)' திரைப்படம் வெளியாகியது. இதில் ஜோக்கராக தோன்றி அனைவரையும் பதைபதைக்க வைத்தார் ஹீத் லெட்ஜர். அவரின் ரசிகர்களும், டி.சி காமிக்ஸின் ரசிகர்களும் ஜோக்கரை கொண்டாடி தள்ளினர். விமர்சகர்களின் பாராட்டுகளையும பேற்ற அவரது நடிப்புக்கு அஸ்கர் நிச்சயம் என்று பத்திரிக்கைகள் ஆருடம் கூறின.

oscar 2019

அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் சொல்லி வைத்ததைப் போல் ஹீத் லெட்ஜரை வெற்றியாளராய் அறிவித்தது. ஆனால் அதை வாங்க அவர் வரவில்லை என்பதால், அரங்கில் கனத்த மவுனமே நிலவியது. படம் வெளியாகி ஆறு மாதத்தில் ஹீத் லெட்ஜர் மாரடைப்பால் இறந்திருந்தார்.

"நான் வேடிக்கையாக இருப்பதால் மட்டுமே இதை (நடிப்பு) செய்கிறேன். நான் மகிழ்ச்சியடைவதை நிறுத்துகின்ற நாளில், இந்த தொழிலை விட்டுவிடுவேன்" - அந்த உன்னத கலைஞனின் வரிகள்.

"நாங்கள் உண்மையிலேயே உன்னை(ஹீத் லெட்ஜர்) இந்த இடத்தில் காண ஆசைப்பட்டோம் , ஆனால் உன் அழகான மாட்லிடா (மகள்) சார்பாக இந்த விருதை நாங்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறோம்" ஹீத்தின் தங்கை மேடையில் கண்கலங்கியதும் மொத்த அரங்கமுமே சேர்ந்தே தழுத்தழுத்தது.

இப்படி மறைந்த நடிகர்களைக் கூட அங்கிகரிக்கத் தவறாத ஆஸ்கர், சில வேளைகளில் கலைஞர்களை தர்மசங்கடத்திலும் ஆழ்த்தியது.

பிராங்க் கேப்ரா

1934 அம் ஆண்டு நடந்த 6வது அஸ்கர் விழாவில் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் 'லிட்டில் வுமன் (littlewoman)' திரைப்படத்துக்காக ஜார்ஜ் குக்கர், லேடி பார் அ டே (lady for a day) திரைப்படத்துக்காக பிராங்க் கேப்ரா, கவல்காட் (cavalcade) திரைபடத்துக்காக ஃபிராங்க் லாய்டும் தேர்வாகி இருந்தனர்.
பத்திரிக்கைகளும், விமர்சகர்களும் வெற்றி பிராங்க் கேப்ராவுக்கே என்றனர். அவரும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார்.
பிரபல நடிகரும், எழுத்தாளருமான வில் ரோஜர் அந்த விருதை வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையேறிய வில், வெற்றியாளர் யார் என்பதை பார்த்து விட்டு,

"நான் இந்த இளைஞனை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அவர் மிகவும் கீழே இருந்து மேல் எழுந்து வந்ததை பார்த்திருக்கிறேன், இப்போது நான் கீழே உள்ளேன், அண்ணாந்து பார்த்து ஆச்சரியம் அடைகிறேன். இது ஒரு இனிமையான தருணம் . வா, அதை வாங்க, பிராங்க்! " என்றார்.
ஆனால் வெற்றிப்பேற்றது எந்த பிராங்க் என்பதை அறிவிக்க தவறியிருந்தார்.

இந்நிலையில் பிராங்க் கேப்ரா துள்ளி எழந்தார். மேடைக்கு விறுவிறுவென அவர் நடந்து செல்ல அரங்கத்திலுள்ள ஸ்பாட்லைட்டுகள் மற்றோரு பிராங்கான பிராங்க் லாய்டின் மேல் விழுந்தது. ஏனெனில் வெற்றிப்பெற்றது ஃபிராங்க் லாய்டு.

கேப்ரா மேடையை நோக்கி நடந்து வருவதைப்பார்த்த வில் ரோஜர் நடக்க இருக்கும் தர்மசங்கடத்தை தவிர்க்கும் விதமாக,
"இந்த விருதை வழங்க பிராங்க் கேப்ராவையும் ஜார்ஜ் குக்கரையும் மேடைக்கு அழைக்கிறேன்" என்றார்.

ஹீத் லெட்ஜர்-ஜோக்கர்

அதற்குள் விபரத்தை பிராங்க் கேப்ராவிடம் தெரிவித்துவிட அவமானம் தாங்காமல் தன் இருக்கையிக்கு திரும்பினார். இது குறித்து அவர் தன் சுயசரிதையில்,
"நான் மேடை ஏறாமல் திரும்பியபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த விஐபிகள் நான் அவர்களின் பார்வையை தடுத்து கொண்டிருந்ததால் "உட்காருங்கள்! கீழே உட்காருங்கள்! என்று கூச்சலிட்டார்கள். அப்போது என் வாழ்க்கையில் மிக நீண்ட, சோகமான, நடையை நடந்து கொண்டிருந்தேன். ஒரு புழுவை போல கார்பட்டின் கீழ் நான் ஊர்ந்து சென்றுவிட வேண்டும் போல் தோன்றியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டென்சல் வாஷிங்டன்

அந்த ஆண்டு லேடி பார் அ டே ஒரு விருதைக் கூட வென்றிருக்கவில்லை. நொந்துபோன கேப்ரா இனி அகாடமி விருது வென்றால் கூட ஒருபோதும் அதை பெற்றக்கொள்ள போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் கதை இத்தோடு முடியவில்லை. அடுத்த ஆண்டே சிறந்த இயக்குனர் விருதை வென்று மேடையேறினார். இதுமட்டுமின்றி மேலும் இரண்டு முறை இதே விருதைப் பெற்று அத்தனை அவமானங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்தார் கேப்ரா.

இதைபோல இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகளையும் உணர்வுகளையும் சுமந்திருப்பதால் தான் ஆஸ்கர், இன்றும் உலக அளவில் அதிக பார்வையாளர்களைக் கொண்டதாக உள்ளது. இதேபோல் இந்த ஆண்டும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என்று அடித்துக்கூறுகிறார்கள் ஆஸ்கர் ஆர்வலர்கள்.

ABOUT THE AUTHOR

...view details