வாஷிங்டன்: தொகுப்பாளர் இல்லாமல் 92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏபிசி என்டர்டெயின்மென்ட் தலைவர் கேரே ப்ரூக், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. ஆஸ்கர் அகாதமியுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தொகுப்பாளர் இல்லாமல் கடந்த ஆண்டில் விருது நிகழ்ச்சி நன்றாக அமைந்திருந்தது என்றார்.
ஆஸ்கர் அகாதமியுடன் இணைந்து முதல் முறையாக தயாரிப்பாளர்கள் லைநேட் ஹவெல் டெய்லர், ஸ்டேப்னி அலியன் ஆகியோர் இந்த ஆண்டு விருது நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
கடந்த ஆண்டில் நகைச்சுவை நடிகர் கெவின் கார்ட்ஸ் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்தது. ஆனால் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரானவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்விதமாக அவர் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் திடீரென நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.
இதைத்தொடர்ந்து ஆஸ்கர் அகாதமியினர் மாற்று தொகுப்பாளரை நியமிக்காமல், முதல் முறையாக தொகுப்பாளர் இல்லாமல் விருது நிகழ்ச்சியை நடத்தினர்.
இது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்த நிலையில், தற்போது இந்த ஆண்டிலும் அதைத் தொடர்கின்றனர். இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.