தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கர் விருது வழங்கும் விழா: உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பு!

ஹாலிவுட் திரைக்கலைஞர்களின் கனவான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இன்னும் இரண்டு நாட்களில் நடக்க உள்ளது. விருது வாங்கும் நட்சத்திரங்கள், திரைப்படங்கள், சர்ச்சைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள பெரும் ஆவலோடு உலக சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Oscar
Oscar

By

Published : Feb 7, 2020, 8:33 PM IST

திரைக் கலைஞர்களின் உயர்ந்த அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. எந்த திரைப்படத்துக்கு எந்தெந்த பிரிவுகளில் விருதுகள், எந்த கலைஞருக்கு என்ன அங்கீகாரம் என்பதைத் தாண்டி, நடிகர் நடிகைகளின் ஆடை அணிவகுப்பு, விருதுகள் வழங்குவதில் சர்ச்சை, ராம்ப் வாக், ஸ்டைல் ஸிம்பல் (style symbol) என பல காரணங்களாலும் ஆஸ்கர் விருதுகள் தனி கவனம் பெறுகிறது.

லூயிஸ் பி. மேயர்

2016ஆம் ஆண்டு ரெவனன்டு (revanant) படத்துக்காக சிறந்த நடிகர் விருது லியனார்டோ டி காப்ரியோவுக்கு அளித்தபோது, காலம் தாழ்த்தியமையால் நடுவிரல் தெரிவது போல் விருது பிடித்து காட்டியது, 2017ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் தேர்வான 'சேல்ஸ்மேன்' திரைப்படத்தின் இயக்குநர் அஸ்கார் பர்ஹதி விருது வாங்க வராதது, 2018ஆம் ஆண்டு சிறந்த திரைப்படப் பிரிவுக்கு தேர்வான படத்தின் பெயரை மேடையில் மாற்றிக்கூறியது என பல்வேறு சர்ச்சைகளைக் கடந்த ஆண்டுகளில் ஆஸ்கர் விருது விழா சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் கலக்கலாகத் தொடங்கியுள்ளது ஆஸ்கர் ஃபீவர். ஏற்கனவே விருதுகளுக்கான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி 92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த விருது விழாவின் பின்னணி குறித்து தெரிந்துகொள்வோம்.

1929ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விழா

1927ஆம் ஆண்டு எம்.ஜி.எம். ஸ்டுடியோவின் தலைவர் லூயிஸ் பி. மேயர் 36 உறுப்பினர்களைச் சேர்த்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் ‘ஆம்பாஸ் - அகாதமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட் அண்ட் சயின்ஸ்’ (AMPAS-ACADEMY OF MOTION PICTURES ARTS AND SCIENCE) என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த அமைப்பானது சினிமாத் துறையின் நன்மைக்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்டக் குழுவை உருவாக்கும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. பின் 1929ஆம் ஆண்டு திரைகலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அங்கீகரிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட விருதுதான் இந்த ஆஸ்கர். கடந்த 1929ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ரூஸ்வெல்ட் ஹோட்டலின் ப்ளாசம் அரங்கில் 270 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதுதான் முதல் ஆஸ்கர் விழா.

எமில் ஜானிங்ஸ்

இப்படி சிறு கூட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா, 92 ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியடைந்தது. இன்று ஆஸ்கர் நிகழ்ச்சியின் இடைவேளையின்போது ஒளிபரப்பப்படும் 30 நொடி விளம்பரத்தின் மதிப்பு மட்டும் ரூ.18.5 கோடி. முதல் ஆஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுயார் என்று தெரியாதபோதும், முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றவர் என்ற பெருமை எமில் ஜானிங்ஸையே சாரும். ஜெர்மன் நாட்டவரான இவர், ஐரோப்பியாவுக்கு செல்ல இருந்ததால் சீக்கிரமே விருதைத் தர சொல்லி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது அன்றைய அகாதமி. அதனால் எமில் ஜானிங்ஸே முதல் ஆஸ்கரை பெற்றுக்கொண்டவர் ஆகிறார்.

22 பிரிவுகளில் திரைக்கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சிறப்பு பிரிவுகளில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்களையும், திரைப்படங்களையும் ஆஸ்கர் விருதுக்குழு தேர்ந்தேடுத்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கப்பட்ட திரைப்படங்களை, ஆம்பாஸ் (AMPAS) உறுப்பினர்கள் பார்க்க கால அவகாசமும் அளிக்கும். பின் உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளரை விருதுக்குழு தேர்ந்தெடுக்கும்.

ஆஸ்கர்

வாக்கு எண்ணிக்கை மறைமுகமாக நடைபெறுவதாலும் வாக்குகளை யார் அளித்தார் என்று அறிவிக்காமல் இருப்பதாலும் விருது வழங்குவதில் நம்பகத்தன்மை இல்லை என்ற சர்ச்சையும் ஒருபுறம் நீடித்துவருகிறது.

2019ஆம் ஆண்டின்படி 8000 ஆம்பாஸ் (Academy of Motion Picture Arts and Sciences (AMPAS)) உறுப்பினர்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details