தமிழ் சினிமா தொடர்ந்து புறக்கணித்து வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்து கதாப்பாத்திரங்களை மீட்டெடுத்து 'தலித் சினிமா' என்ற தனிப்பட்டியலுக்குள் இணைந்தவர்கள் பா. ரஞ்சித், சுசீந்திரன், விஜய், கோபி நயினார், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள்.
அதில் மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்வியலையும், அவனைச் சுற்றி இருக்கிற சமூகத்தையும், சாதி ஆதிக்கத்தையும் அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. படத்தின் பெயரையே தாங்கி நிற்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த கதிர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருந்தார்.
திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் சமூகத்தில் பரவிக் கிடக்கும் சாதிய ஆதிக்கத்தையும், சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளையும், அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கும்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் கொலை செய்யப்படும் கறுப்பி, புளியங்குளத்து இளைஞர்கள் குளித்துச் சென்ற குளத்தில் சிறுநீர் கழிக்கும் ஆதிக்க சாதி இளைஞர்கள், வா உ சி, பெரியார், எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் சிலைகள் மட்டும் சுதந்திரமாக வெளியே இருக்க, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர், முத்துராமலிங்கர் போன்ற தலைவர்கள், 'கோட்டா' என்ற ஒற்றைச் சொல்லில் இருக்கும் ஆதிக்கம், தொடர்ந்து நிகழும் ஆணவக் கொலைகள், நவீன தீண்டாமையாய் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் இரட்டைக் குவளை முறையும் தடுப்புச் சுவரும், நீதி கிடைக்காத தாமிரபரணி கொலைகளும், மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் நவீன தொழில்நுட்பம் இவை எல்லாமே - "இப்பலாம் யாருங்க ஜாதி பாக்குறா?" எனக் கேட்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் பெரிய சாட்டையடி.