ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், 'ராதே ஷ்யாம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, இத்தாலி, பாரீஸ் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று (ஆகஸ்ட்.30) வெளியானது. அதில் பூஜா ஹெக்டே மயில் இறகு உடையணிந்து பியானோ வாசிக்க, பிரபாஸ் அவரை ரசித்துப் பார்க்கும்படி இடம்பெற்றுள்ளது.
இப்புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "இந்த படத்திற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். கண்டிப்பாக இப்படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறும். கிருஷ்ண ஜெயந்தியன்று இந்தப் போஸ்டரை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.