இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்துள்ள படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே தோன்றும் இந்தப் படம் உலக அளவில் வெளியான சோலோ கேரக்டர் படங்களில் 13ஆவது படமாக வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில், படம் மீது ரசிகர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனிடையே 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் ரிலீசுக்கு முன் பெற்றிருக்கும் தனித்துவத்தை விவரிக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அதில், 1963ஆம் ஆண்டு வெளியான முதல் சோலோ கேரக்டர் படமான 'ஸ்லீப்' என்ற படத்தில் தொடங்கி கடைசியாக 2016இல் வெளிவந்த 'தி ஷலோஸ்' வரை போஸ்டர்கள் காட்டப்படுகிறது. இறுதியில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை நடித்து, எழுதி, தயாரித்து, இயக்கி இருப்பவரும் ஒருவர்தான். இது உலக சினிமா வரலாற்றில் முதல் முயற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சோலோ கேரக்டராக நடித்தது மட்டுமல்லாமல் படத்தின் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ஒருவரே நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தும்விதமாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் விமர்சனம் மற்றும் கருத்துப் பகிர்வு இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை என உலகில் முதன்முறையாக இடைவெளியின்றி 24 மணி நேரம் இந்த நிகழ்வை நிகழ்த்துகின்றனர். இது சாதனையாக ஏசியின் புக் ஆஃப் ரெக்காட்ர்ஸ்-இல் இடம்பிடிக்கவுள்ளது.