நடிகர் அஜித் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வழக்கறிஞராக தோன்றும் 'நேர்கொண்ட பார்வை' வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிகர்கள் படத்தின் ப்ரோமோ காட்சிகளை ட்ரெண்டாக்கிவருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் விதவிதமான ப்ரோமோ மூலம் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்துள்ளது.
இந்நிலையில், இதே பாணியில் நீதிமன்ற பின்னணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'நூற்றுக்கு நூறு' படத்தை பற்றிய ரீ-வைண்ட். தமிழ் சினிமா 1971ஆம் ஆண்டே 'மீடு' பிரச்சனையை சந்தித்துவந்தது. ‘நூற்றுக்கு நூறு’ 1971ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ், பலரும் நடித்துள்ளனர்.
நூற்றுக்கு நூறு படத்தின் காட்சி பேராசிரியர் பிரகாஷ் (ஜெயசங்கர்) மீது அவருடைய மாணவிகளாக நடித்த ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ஜெயக்குமாரி ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டினை அவர் மீது சாட்டினர்.
அதன்காரணமாக அவரை விட்டு விலகிப்போகும் அவரது காதலி, ஒழுக்கமானவர் என்று கருதப்பட்ட பேராசிரியர் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று வசைபாடும் மாணவிகளின் பெற்றோர், அவரை சந்தேககக் கண்ணோடு பார்க்கும் கல்லூரி நிர்வாகம், அவர்மீது கொஞ்சமும் கருணை காட்டாத சமுதாயம்... இத்தனை தடங்கல்களையும் உடைத்தெறிந்து, தான் எந்தவித அப்பழுக்கும் இல்லாதவர் என்பதை நிரூபிக்கும் கல்லூரி பேராசிரியரின் கதையை தனக்கே உரித்தான பாணியில் சொல்லி நம்மைக் கவந்திருந்தார் இயக்குநர் கே. பாலச்சந்தர்.
வழக்கமாக ஆக்ஷன், அடிதடி, க்ரைம், நகைச்சுவை என்று மட்டுமே நாம் பார்த்துப்பழகியிருந்த ஜெய்சங்கர்- கணிதப்பேராசிரியர் கதாபாத்திரத்தில் தூள் கிளப்பியிருப்பார். அவரது காதலியாக வரும் லட்சுமி, தன் காதலரான பேராசிரியர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, தன் கண்முன்னே நடக்கும் சம்பவங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகுமிடங்களில் தனக்கே உரித்தான அசாத்தியமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
நூற்றுக்கு நூறு படத்தின் காட்சி கவர்ச்சிப்பாவையாகவே தமிழ்த்திரையுலகம் பயன்படுத்திவந்த விஜயலலிதாவை, இப்படியெல்லாம் கூட நடிக்கவைத்து அசத்தமுடியும் என்று காட்டியிருக்கிறார் கே. பாலச்சந்தர்.
வழக்கமாக இயக்குநர்கள் தாங்கள் சொல்லவரும் கருத்துகளை நாகேஷ் மூலமாகச்சொல்வது வழக்கம். பேராசிரியர் மீது களங்கம் சுமத்துவோர் முன் ஒரு பெரிய வெள்ளைத் தாளில் கருப்புப்புள்ளி வைத்து "இப்போ உங்களுக்கு என்ன தெரிகிறது?" என்று கேட்க, அவர்கள் "கருப்புப்புள்ளி" என்று சொன்னதும், "அதானே பார்த்தேன். அதைச்சுற்றி இவ்வளவு பெரிய வெள்ளைத் தாள் இருப்பது கண்ணுக்குத்தெரியாதே. சின்ன கருப்புப்புள்ளி மட்டும்தானே தெரியும். அந்த அளவுக்கு எல்லோருக்கும் குறுகிய எண்ணம். அதனால்தான் எங்கள் பேராசிரியர் மேல் களங்கம் சுமத்துறீங்க" என்று மடக்குமிடத்தில் நமக்குத்தெரிவது நாகேஷ் அல்ல, பாலச்சந்தர். நூற்றுக்கு நூறு கொஞ்சம் புத்திசாலித்தனமான படம். ஸ்ரீவித்யா என்ன நடந்தது என்று சொல்லும்போது ஃப்ளாஷ்பேக்கில் அவர் விடும் ரொமாண்டிக் லுக்கும், தானே விவரிக்கும்போது அவர் முகத்தில் காட்டும் கண்டிப்பும் நல்ல கான்ட்ராஸ்ட்.
நூற்றுக்கு நூறு படத்தின் காட்சி 'நூற்றுக்கு நூறு' திரைப்படம் குடும்பத்தினர், பெண்கள், இளைஞர்கள், அலுவலகம் செல்வோர், மாணவ மாணவியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த வெற்றிப்படமாக அமைந்தது. இன்றைக்கும் இப்படத்துக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் 'மீடு' பிரச்சனை அப்போத தொடங்கிவிட்டது போல...