இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்குப் பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் செகண்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் கைகளில் வர்ணம் படிந்த படியும் செகண்ட் லுக்கில் கையில் பிரஷ் வைத்து ஓவியம் வரைவது போலவும் உள்ளது.
இந்நிலையில் படத்தில் கதாநாயகியான அனுஷ்காவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு நாளை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
அனுஷ்கா இதுவரை எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தபோதும் இந்த ‘சைலன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று படக்குழு அறிவித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்கா சினிமாவில் வருவதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.