தமிழ் சினிமாவின் லீடிங் ஸ்டாரான விஜய் 'துப்பாக்கி', 'தலைவா' படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக என்ன படத்தை தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. காரணம் ஏ.ஆர். முருதாஸுடன் அவர் முதன்முறையாக இணைந்த 'துப்பாக்கி' திரைப்படம் பெரும் வெற்றியை பதிவு செய்ததோடு வசூல் ரீதியாகவும் அவரை மாபெரும் கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது.
அதன்பின் வெளியான தலைவா படம் ரிலீசிலிருந்தே பல்வேறு தடைகளைச் சந்தித்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தச் சூழலில் விஜய் தனது பிளாக்பஸ்டர் டைரக்டர் முருதாஸுடன் இணைந்து அடுத்த படத்தை தொடங்குகிறார்... இந்தப் படமும் ஆரம்பத்திலேயே விமர்சனங்களில் சிக்கியது.
இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம் கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தது. ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. அதைத் தொடர்ந்து வெளியான டீசரும் விஜய் மாறுபட்ட பரிமாணத்தை படத்தில் காணலாம் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்தது. விஜய் ரசிகர்கள் கத்தி படத்தின் ரிலீசுக்கு முன்பே கொண்டாடினர்.
துப்பாக்கி படத்தின் தலைப்பு, தலைவா படத்தில் டைம் டூ லீட் கேப்ஷன் என தொடர்ந்து ஏதாவது சர்ச்சைகளைச் சந்தித்த விஜய் படம், இம்முறை கதை சர்ச்சையில் சிக்கியது கத்தி. இருப்பினும் பல்வேறு தடைகளைத் தாண்டி லைகா தயாரிப்பு நிறுவனம் தங்களின் முதல் குழந்தையான கத்தி படத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்தது. ஒரு வழியாக படம் 2014ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று வெளியானது.
படத்தின் முதல் காட்சியில் சிறையிலிருந்து தப்பித்து சென்னைக்கு வரும் விஜய் (கத்தி என்கிற கதிரேசன்), சென்னையில் தன்னைப்போன்று மற்றொரு விஜய்யை (ஜீவானந்தம்) பார்க்கிறார். ரவுடி கும்பலால் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான விஜய்யை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்க்கிறார் ஜெயில் கைதி விஜய்.
தமிழ் சினிமாவின் வழக்கமான ஆள்மாறாட்ட பாணியில், சுடப்பட்ட விஜய் தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்குச் செல்கிறார் ஜெயிலிலிருந்து தப்பிவந்த விஜய். பின்னர் அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்ல நினைக்கும் அவர், தான் காப்பாற்றி விஜய் குறித்து அறிந்தபின் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து வயதானவர்களின் துணையுடன் போராடுகிறார். அப்போது கார்ப்பரேட் நிறுவனம் அளிக்கும் பல்வேறு இன்னல்களைச் சமாளிக்கும் விஜய் அதிலிருந்து எப்படி ஜெயிக்கிறார் என்பது போன்று கதைக்களத்தில் விவசாயம், கம்யூனிசம், கார்ப்பரேட் அரசியல் என பல விஷயங்களை அழுத்தம் திருத்தமாகக் கத்தி படம் சொல்லியிருக்கும்.
இந்தப் படத்தில் விவசாயிகள் மீது அலட்சியம்காட்டுவது அரசு மட்டுமல்ல, சமுதாயமும்தான் என்பது பற்றி எடுத்துரைத்திருப்பார் இயக்குநர் முருகதாஸ். அதை மக்களுக்கு உணர்த்தவே சென்னை மக்களுக்குதச் செல்லும் தண்ணீர் சேவையை தடுப்பதற்காக விஜய்யை தண்ணீர் பைப்பில் அமர்ந்து போராட வைத்திருப்பார்.
படத்தின் ஒரு காட்சியில் தனது தங்கைக்கு இட்லி மூலமாக கம்யூனிசம் பற்றி விளக்கும் விஜய்யின் டயலாக் சாமானிய மக்கள் சுரண்டப்படுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கும். இப்படி படத்தில் பல மறைமுக அரசியல் பேசப்பட்டாலும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், இந்தியாவில் அதிகமாகும் கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சுரண்டுவதை வெளிப்படையாகவே பேசியிருப்பார்.
அதுமட்டுமல்லாது ஒரு கிராமத்தின் பிரச்னையை எடுத்துக் கூற காலம் ஒதுக்க முடியாத தொலைக்காட்சி சேனல்களில் நடன நிகழ்ச்சிக்கும், லேகியம் விற்பதற்கும் நேரம் உள்ளது என்பதையும் சாடியிருப்பார். விஜய்யின் சாடல் அந்தத் தொலைக்காட்சி சேனல்களுக்கு மட்டுமல்ல; அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து, பிற விவசாய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த சமுதாயத்திற்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.