சென்னை: அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் காட்சிகளைடெல்லிப் பகுதிகளில் படமாக்கிவிட்டு படக்குழுவினர் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
குற்றம் 23 படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் - இயக்குநர் அறிவழகன் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்தது.
இதையடுத்து இந்தப் பகுதிகளில் எடுக்கப்படவேண்டிய காட்சிகளை எடுத்துமுடித்துள்ள படக்குழுவினர், தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து அருண் விஜய் தனது ட்விட்டரில், டெல்லி, ஆக்ரா பகுதிகளில் அற்புதமாக ஷூட்டிங் செய்துவிட்டு தற்போது பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளோம்.
இந்தச் சூழ்நிலையில் மிகவும் கவனமாக பணியாற்றிய படக்குழுவினருக்கு நன்றிகள். எங்கள் மீது அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றி. எல்லோரும் உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் இப்படத்தின் கதாநாயகிகளுள் ஒருவரான ஸ்டெஃபி பட்டேல் தனது ட்விட்டரில், டெல்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகை அருகே மிகவும் அற்புதமான படக்குழுவினருடன் #AV31 ஷூட்டிங் நடைபெற்று முடிந்தது.
கோவிட்-19 தொற்று தொடர்பாக அக்கறை செலுத்திய அனைவருக்கு நன்றி. தற்போது டெல்லிப் பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் சென்னையில் சந்திக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இது அருண் விஜய்யின் 31ஆவது படம் என்பதால் #AV31 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
படத்தில் அருண் விஜய், ரெஜினா காஸண்ட்ரா, ஸ்டெஃபி பட்டேல் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் டெல்லிப் பகுதி காட்சிகளை படமாக்க அங்கு சென்ற படக்குழுவினர் மழை, கோவிட்-19 பீதிகளுக்கிடையே வெற்றிகரமாக ஷூட்டிங்கை நடத்தி முடித்து திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க:ரெஜினாவுடன் டெல்லி பறந்த அருண் விஜய்