நீதிமன்ற விசாரணை, வக்கீலாக தோன்றும் கதாபாத்திரங்களுக்குள் நிகழும் வாதங்கள் என அந்தவகை படங்கள் பல்வேறு திருப்புமுனை காட்சிகளுடன் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். தமிழ் ஹீரோக்கள் காக்கி உடை அணிந்து காவலராக தோன்றுவதை கம்பீரமாக பார்த்த ரசிகர்கள், கறுப்பு உடை அணிந்து சட்டத்தையும், நீதியையும் நிலை நாட்டுவதை பார்த்து சிலாகிக்கவும் செய்துள்ளனர்.
ஆக்ரோஷமாக வெளிவரும் சக்திவேல் தமிழில் நீதிமன்றத்தை பின்னணியாக வைத்து 'நூற்றுக்கு நூறு', 'மௌனம் சம்மதம்', 'பிரியங்கா', 'எல்லாம் அவன் செயல்', 'தெய்வத்திருமகள்' முதல் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'மனிதன்' வரை ஏரளாமான சினிமாக்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வரிசையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கறுப்பு அங்கி அணிந்து அஜித் விசாரணை செய்யும் விதமும், அவர் பேசும் வசனங்களும் அந்தப் படத்தின் ட்ரெய்லரில் தெறிக்கவிட்டது.
இந்த நிலையில், 'நேர்கொண்ட பார்வை' போன்று நீதிமன்ற பின்னணியில் வெளியாகி, ரசிகர்கள் மனதை கவர்ந்த படங்களின் முக்கிய காட்சிகளை சிறிய ரீ-வைண்டாக பார்க்கலாம்.
காதலி பிரியாவுடன் வக்கீல் சக்திவேல் 2016ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அஹமத் இயக்கத்தில் வெளியான படம் 'மனிதன்'. இந்தியில் அர்ஷத் வார்ஸி நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட 'ஜாலி எல்.எல்.பி.'யின் தமிழ் வெர்ஷனே 'மனிதன்' திரைப்படம்.
பணத்தாசை பிடித்த புகழ்பெற்றவக்கீலுக்கும், அநியாயத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இளம் வக்கீலுக்கும் இடையேயான நிகழ்வுதான் மனிதன் படத்தின் கதை.
வக்கீலுக்கு படித்துமுடித்து கோவை நீதிமன்றத்தில் வாதாட திறமையற்ற காமெடி வக்கீலாக இருக்கிறார் பொள்ளச்சி சக்திவேல் (உதயநிதி ஸ்டாலின்). இவருக்கு இந்தப் பெயரை மாற்றி புகழ் பெற்ற வக்கீலாக மாற வேண்டும் என்ற ஆசை எழுகின்றது.
அதற்கு சக்திவேல் தேர்ந்தெடுத்த நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம். அங்கு வக்கீலாக உள்ள உறவினர் விவேக்குடன் சேர்ந்து வழக்குக்காக அலைகிறார். அப்போது சக்திவேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
நீதிமன்றத்தில் வாதாடும் சக்திவேல் நள்ளிரவில் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓட்டிவந்த பெரிய இடத்து பணக்கார இளைஞன் ஒருவன், தங்குவதற்கு இடம் இல்லாமல் நடைபாதையில் தூங்கி வாழ்க்கையை கடத்திவரும் அன்றாட தொழிலாளர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்துவிடுகிறார்.
ஆனால் வக்கீல் ஆதிசேஷன் (பிரகாஷ்ராஜ்) அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிறார். இந்த விவகாரத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தால், நாமும் பிரபலமாகலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்று திட்டமிட்டு பொதுநல வழக்குத் தொடர்கிறார் சக்திவேல். அதன் பின் அவர் சந்திக்கும் சிக்கல்களை எப்படி கையாளுகிறார் என்பதை அழகான திரைக்கதையால் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அஹமத்.
எதிர்தரப்பு வாதத்தை கேட்கும் நடுவர்
படத்தின் பெரும்பாலான காட்சிகள் வழக்கு விசாரணை, அதனால் ஏற்படும் நிகழ்வுகளை வைத்தே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும். கிளைமாக்ஸை நெருங்கிய காட்சியில் இறுதி வாதத்தை முன்வைக்கும் ஆதிசேஷன், ‘பிளாட்ஃபார்ம் ஒன்றும் பெட் ரூம் இல்லை... அவங்க அங்க போய் படுக்க’ என்பார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சக்திவேல், ‘பிளாட்ஃபாரத்தில காரும் ஓட்டக்கூடாது’ என்பார்.
பரபரப்பாக வாதாடும் வக்கீல்கள் மற்றொரு காட்சியில் நடைபாதையோரம் சிறுநீர் கழிக்கப் போகும்போது அங்கிருக்கும் ஒருவர், ‘தள்ளிப் போங்க... இது நாங்க படுக்குற இடம்’ என்று கூறும்போது ரசிகர்களுக்கு அவர்களின் மனநிலையை உணர வைக்கிறது.
நீதிமன்றத்தில் நடுவர் தனபால் (ராதாரவி) வக்கீல்கள் அதிசேஷன், சக்திவேல் ஆகியோரின் நடிப்பும் சரி, அவர்கள் வாதாடும் விதம் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அடுத்து என்ன நடக்கவுள்ளது என ஆர்வத்தை பார்ப்பவர்களிடத்தில் ஏற்படுத்தும்.
வழக்கு குறித்து விளக்கும் சக்திவேல் வாதத்தை முன்வைக்கிறேன் பேர்வழி என்று காது கிழிய கத்தும் பிரகாஷ்ராஜிடம் , 'உட்காருங்க ஆதிசேஷன்' என மென்மையாக ராதாரவி கூறுவது நீதிபதிகள் வழக்கின் மீது வைத்துள்ள அக்கறை மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
கிளைமாக்ஸில் சாட்சியாய் வந்து ரசிகர்களைக் கலங்கவைக்கும் வந்தவாசி நபரின் நடிப்பு, உதயநிதிக்கு நோஞ்சான் பாதுகாவலராக வந்து, சட்டென்று ஒரு திருப்பம் தரும் அந்தக் காவலர் என படம் முழுவதும் ரசிகர்களை நீதிமன்றத்திலும், அந்த வழக்கிலும் இருப்பது போன்று உணர்வை ஏற்படுத்தும்.
இறுதியில், அந்த வழக்கின் தீர்ப்பாக பணக்காரப்பையனுக்கு வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்து, சிறை தண்டனையை விதிப்பார் நீதிபதி தனபால்.
வழக்கில் வெற்றிபெற்ற வக்கீல் சக்திவேல், ஏழை மக்களுக்கு மகானாகவும் ரசிகர்களுக்கு மா'மனிதன்' ஆகவும் தோன்றினார். அவர்களுக்கு மட்டுமல்ல படத்தை பார்த்த ஒவ்வொருவருக்கும்தான்.
இந்தப் படம் சினிமாவுக்காக எடுக்கப்பட்ட கற்பனை கதையாக இல்லாமல், உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்டது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏற்றியதாக கூறப்பட்ட வழக்கில், இதேபோல் பணக்காரர்களால், ஏழைகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னும் ஏராளமானவை வெளிவராமல் இருக்கின்றன.