கடவுளின் தேசமான கேரளா எப்போதும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும். பசுமை, வாழ்க்கை முறை, உணவு எதுவாக இருந்தாலும் சரி, குறிப்பாக சினிமா 'பிரமேம்' உள்ளவர்களுக்கு மலையாள சினிமா, ஏதோ ஒரு விதத்தில் நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படி அங்குள்ள சினிமா நடிகர்கள் பலர் நம்மூர் ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனவர்களாக இருப்பர்.
அப்படி சமீபகாலமாக தென்னிந்திய 'மலர்'களுக்கு 'பிரேமம்' நாயகனாக வலம் வருபவர் நிவின்பாலி. நடிப்பைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வெளிநாட்டு கம்பெனியான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைப் பார்த்து வந்தார். அப்படி தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிவினுக்கு ஒரு கால், அவரது வாழ்க்கையையே மாற்றியது. நிவினின் அப்பா திடீர் என மரணமடைகிறார். அதன் பின் அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டுடன் வந்து வசிக்க ஆரம்பிக்கிறார், நிவின்.
அப்படி இருக்கும் வேலையில் 'மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்' படத்திற்காக ஆடிஷன் நடைபெறுகிறது. இவரும் அதில் கலந்துகொள்ள லீட் ரோலுக்கான லிஸ்ட்டில் அவர் பெயர் இல்லாமலேயே போனது. ஆனால் அந்த நேரம் அவர் பக்கம் அதிர்ஷ்டகாற்று வீச ஆரம்பித்தது. முதலில் அந்த படத்தில் நடிக்க இருந்த நபருக்கு அதில் நடிக்க முடியமால் போகவே, படக்குழு நிவினை அழைத்தது. படம் முழுக்க 'உர்ர்ர்' என இருக்கும் பிரகாஷன் ரோலில் வந்த நிவின், தன்னை வளர்த்த 'மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்பைக்' காப்பாற்ற தனது நண்பர்களுடன் அவர் செய்யும் வேலையே கதை. படம் அப்போதைய கேரள இளைஞர்களால் கவனிக்கப்பட்டது.
'ஜேக்கபிண்டே ஸ்வர்க்க ராஜ்யம்' - நிவின் அதன் பின் 'ட்ராஃபிக்' படத்தில் இறுதியில் காரில் லிப்ட் கேட்கும் நாயகனுடன் 'ஸ்பீடு பேடி உண்டோ?’ என சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். அதன் பின் ’தி மெட்ரோ, செவன்ஸ், ஸ்பேனிஷ் மசாலா’ உள்ளிட்ட படங்களில் சின்னச் சின்ன ரோல் மூலம் நடித்து ரசிகைகளின் கவனத்தைப் பெற்றார்.
இப்படி கெஸ்ட் ரோலில் வந்தவரை மலையாள சினிமாவின் ஒரு கெஸ்ட்டாக மாற்றியவர் வினித் ஸ்ரீனிவாசன். இவர் எழுதி இயக்கிய ’தட்டத்தின் மறயத்து’ படத்தில், இஷாவுடன் சேர்ந்து நடித்த நிவினை மலையாள இளம் சேட்டன்மார்களும் சேச்சிமார்களும் தங்களுக்கான காதல் கதையின் நாயகன் என கொண்டாட ஆரம்பித்தனர். இப்படம் மொத்த மலையாள சினிமாவின் ட்ரெண்டை மாற்றியது. இப்படத்தில் நடிப்பிற்கு முன்பு நஸ்ரியாவோடு நிவின் சேர்ந்த நடித்த ஆல்பம் பாட்டான 'நெஞ்சோடு சேர்த்து' வைரலாகி வந்தது.
இப்படி இளைஞர்களைக் கவரும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிவினுக்கு இன்னும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றியது. அப்படி இருக்கும் வேலையில் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் நேரம் கதையுடன், நிவின் முன்பில் வந்து நின்றுள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவான இப்படம், மாஸ் ஹிட் கொடுக்க ’பிஸ்தா சாங்’ மரணமாஸ் ஹிட் கொடுத்தது.
இப்படி பாக்ஸ் ஆஃபிஸ் நடிகராக வலம் வந்த நிவினுக்கு அடுத்து அடுத்த வந்த படங்களும் அவரை பூஸ்ட் அப் செய்ய ஆரம்பித்தன. '1983', 'ஓம் சாந்தி ஓசானா', என படங்களை பாக்ஸ் ஆஃபிஸ் வரவேற்றது.
இந்நிலையில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வந்த 'பெங்களூர் டேஸ்' ஒரு ஹிட். அதில் அவர் நடித்த கிருஷ்ணன் பி.பி. (அ) குட்டேட்டன் கதாபாத்திரத்தில், தனி நாடன் மலையாளியாகவே நடித்திருப்பார். அதிலும் ’தான் கல்யாணம் செய்துகொள்ளும் பெண், என்னை சேட்டான்னு விளிக்கனும்’ என்று கூறும் இடத்தில் தனி இன்னசென்ட்.
அதன் பின் வந்த 'ஒரு வடக்கன் செல்ஃபி' நெகட்டிவ் ஷேடில் நடித்த 'இவிடே' என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனது பெர்ஃபாமன்ஸால் கைத்தட்டை வாங்கிக் குவித்தார்.
இந்த படத்திற்குப் பின் வந்த பிரேமம் ஹிட் தான் நிவின் பாலியை மலையாள சினிமாவில் தனியாக அடையாளப்படுத்தியது. ஒருவருடைய வாழ்க்கையில் பள்ளிக் காலம், கல்லூரிக் காலம், திருமணம், நட்பு, காதல் என முக்கியம்சங்களை 'பிரேமம்' படத்தில் அழகாக நிவின் பாலி பிரதிபலித்திருப்பார். அழகான மூன்று கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் இருந்தாலும் தன்னை மட்டும் மறக்க முடியாதபடி பெர்ஃபாமன்ஸால் அசத்திருப்பார். கறுப்பு தாடி, கறுப்பு சட்டை, வேஷ்டி, கண்ணாடி என போட்டுக்கொண்டு, பிரேமன் நிவின் ஸ்டைலில், அப்போது இளைஞர்களும் இளைஞிகளும் களிப்பு மொமெண்ட்களுக்குச் சென்றவர்கள் ஏராளம். இந்தப் படத்தின் மூலமாக தென்னிந்திய ஒட்டு மொத்த ரசிகைகளின் மனதிலும் ஏறி குடியிருக்க ஆரம்பித்தார், நிவின்.
இதன் பின் வந்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜு', 'ஜேக்கபிண்டே ஸ்வர்க்கராஜ்யம்', இந்த படங்கள் நிவினை மற்றொரு பரிணமாத்திற்கு கொண்டுச் சென்றது. 'சகாவு', 'ஹே ஜூடு(hey jude)', 'ரிச்சி', 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா', 'காயங்குளம் கொச்சுன்னி', 'மிக்கயில்'(Mikhael),'லவ் ஆக்ஷன் ட்ராமா', போன்ற வித்தியாச முயற்சிகள் எல்லாம் சேர்ந்தது தான் நிவின் பாலியின் சினிமா கிராஃப். எப்போதும் போல் சாக்லேட் பாயாக இல்லாமல் 'மூத்தோன்' படத்தில் ஆக்ஷனில் மிரட்டக் காத்திருக்கும் அதிரடி நயாகன் நிவினுக்கு தமிழர்களின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஹேப்பி பர்த் டே சேட்டா!