மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம்வருபவர் நிவின் பாலி. தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், பிரேமம், ரிச்சி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் புகழடைந்தார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துறைமுகம்’.
இதனை ‘அன்னையும் ரசூலும்’, ‘கம்மாட்டி பாடம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ராஜுவ் ரவி இயக்கியுள்ளார். நாற்பது, ஐம்பது காலகட்டத்தில் கொச்சின் மட்டஞ்சேரி துறைமுகத்தில் ‘சாப்பா’ என்ற ஒரு வழக்கம் இருந்தது. குடோன்கள், சரக்கு கப்பல்களில் வேலை செய்ய துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துவிடுவார்கள்.
அவர்களில் சிலருக்கு மட்டுமே வேலை கொடுக்க முடியும். அதனால் அந்தத் தொழிலாளர்களின் கூட்டத்துக்குள் சில டோக்கன்களை வீசுவார்கள் முதலாளிக் கூட்டத்தினர். கூட்டத்தில் இருப்பவர்கள் சண்டையிட்டு அந்த டோக்கனைக் கைப்பற்றுவார்கள். டோக்கனை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வேலை.