தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக விழுக்காடு அடிப்படையில் சம்பள முறையை வைத்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் படம் இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய்சேதுபதி உள்ளிட்ட சிலர் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
சூப்பர் குட் பிலிம்ஸின் ஆர்பி சவுத்ரி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கும் பொறுப்பை ஏற்றுள்ள திருப்பூர் சுப்பிரமணியன் ஈடிவி பாரதத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

விழுக்காடு அடிப்படையில் ஊதியம் என்ற அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் தற்போதைய நிலை என்ன?
கதை டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் கதை விவாதம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, திரைக்கதை வேலைகள் மற்றும் ஸ்கிரிப்ட் வொர்க் ஆரம்பமாகிறது. இந்த வேலை இன்னும் 10 அல்லது 20 நாட்களில் முடிந்துவிடும். அதன் பிறகு ஊரடங்கு உத்தரவு நிலையை அறிந்த பின் ஜூன் 15க்கு மேல் படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது.
படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் என்று முடிவு செய்து விட்டீர்களா?
இன்றைய சூழ்நிலையில் இந்த படத்தின் கதை என்பது பேப்பர் ஒர்க் இல் மட்டுமே உள்ளது. கதை, திரைக்கதை, வசனம் அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் கதை மற்றும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப படத்தின் இயக்குநர் நடிகர் நடிகைகளை தேர்வு செய்வார் .
படத்தில் நடிப்பதற்கு யாரெல்லாம் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்?
இந்த படம் ஒரு புது முயற்சியாக இருப்பதால் ஏராளமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இப்போது இயக்குநர் சேரன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மனோபாலா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆர்ட் டைரக்டர் கதிர் சம்பளமே வேண்டாம் இந்த புதுமையான முயற்சியில் நானும் இடம் பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்கள் யாரும் இந்த முயற்சிக்கு பாராட்டவோ அல்லது இந்த முயற்சியில் பங்கு பெற விருப்பம் தெரிவிக்கவில்லை.
விழுக்காடு அடிப்படையில் ஊதியம் எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமையும்? இதற்கு முன்பு இதுபோன்ற முயற்சியில் படங்கள் வந்துள்ளதா?
நன்றாக யோசித்து ஒரு புதிய முயற்சியை செயலாக்க அனைவரும் ஒன்றுகூடி பணியாற்றுகிறோம். இந்த முயற்சி நல்லபடியாக வெற்றி பெறும் என்றுதான் நினைக்கிறோம். படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் இது எந்த அளவுக்கு ஒரு பயனுள்ள விஷயம் என்று. இதற்கு முன்பு இது போன்ற ஒரு முயற்சியில் படம் வந்ததா என்றால் எனக்கு தெரிந்தவரை இல்லை. இதுதான் முதல் தடவை முதல் முயற்சியும் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.
இந்த படத்தில் எத்தனை தயாரிப்பாளர்கள் இணைந்துள்ளனர்?
மொத்தம் இந்த படத்திற்கு 200 ஷேர் என்று நிர்ணயித்துள்ளோம். இந்த 200 ஷேரில் இப்போது 70 பேர் இணைந்துள்ளனர். இதில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என மொத்தம் 70 ஷேர்ஸ் வாங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை திரையரங்கு உரிமையாளர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
இது ஒரு நல்ல முயற்சி இதனை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் அதிக அளவில் படங்கள் வெளியாகும். அதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது.
பெரிய நடிகர்களுக்கு இந்த புதிய முயற்சியால் சம்பளத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா?
எந்த பிரச்னையும் ஏற்படாது. படம் வெற்றி அடைந்தால் அவர் 100 கோடி வாங்கும் கதாநாயகனாக இருந்தால் 150 கோடி அவருக்கு லாபமாக அமையும். வெற்றி தோல்வியை பொறுத்து அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும். லாபத்தை தான் நாம் பங்கிட்டு கொள்கிறோம்.
அதனால் நடிகர்களுக்கு சம்பளம் இல்லாமல் போகாது. ஆனால், இன்வெஸ்டர்களுக்கு நஷ்டம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால், படம் நன்றாக ஓடினால், நல்ல லாபம் தரும் படம் சுமாராக இருந்தால் லாபம் குறைவாக இருக்கும் அல்லது நஷ்டம் ஏற்படும். அப்படியே நஷ்டம் ஏற்பட்டாலும் சிறிய அளவில்தான் இருக்கும்.
அந்த நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் தாங்கிக்கொள்ளும் அளவில்தான் இருக்கும். ஏனென்றால் 200 பேர் அந்த நஷ்டத்தை பங்கிட்டுக் கொள்வதால் நஷ்டம் என்பது சிறிதளவே இருக்கும். பத்து லட்ச ரூபாயில் ஒரு ஷேர் வாங்கினால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே நஷ்டம் வரும்.
இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. முன்பெல்லாம் ஒரு தயாரிப்பாளர் மூன்று கோடி போட்டு படத்தை எடுப்பார் படம் ஓடவில்லை என்றால் முழு நஷ்டமும் அவர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த நிலை இப்போது இல்லை நஷ்டத்தையும் பங்கு போட்டுக்கொள்ளும் நிலை இந்த புதிய திட்டத்தில் உள்ளது. இதேபோல் அந்த மூன்று கோடி ரூபாயை பத்து லட்சமாக 30 படங்களில் ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.
30 படத்தில் 15 படங்கள் ஓடினாலும் தயாரிப்பாளர்கள் தப்பித்துக் கொள்வார்கள். இதனால் நஷ்டம் என்பது பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த முயற்சி கிட்டத்தட்ட ஒரு ஷேர் மார்க்கெட் போன்றதுதான். இதில் என்ன வித்தியாசம் என்றால் அந்தந்த படத்துடன் லாப நஷ்ட கணக்கு வழக்குகள் முடிக்கப்படும். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் மட்டுமே ஷேர், ஷேர் ஹோல்டர்கள் மற்ற அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும்.