'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இதில் நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெளியிட்டு உரிமையை, லிப்ரா நிறுவனம் கைப்பற்றி விட்டதாக சமீபத்தில் விளம்பரம் வெளியானது. அதிலிருந்து லிஃப்ட் படத்தின் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட ஆரம்பித்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,"லிஃப்ட் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி ரவீந்தர் சந்திரசேகர் நடந்து கொள்ளாததால் இரண்டு தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே செய்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது .
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம், லிஃப்ட் தமிழ் திரைப்படத்திற்குச் சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமமும் இல்லை. எனவே ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு வியாபாரத்திற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். லிஃப்ட் திரைப்படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ செய்திகளும் ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினால் மட்டுமே தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.