கோலிவுட்டில் நாகேஷ் தனித்து நகைச்சுவை செய்தாலும் அவ்வப்போது மனோரமாவுடனும் சேர்ந்து கலக்கினார். அதேபோல் கவுண்டமணி - செந்தில் காம்போ இன்றளவும் நிற்கிறது. வடிவேலு, விவேக் பாணி காலப்போக்கில் தனக்கு என்று ஒரு டீம் செட் செய்துகொண்டு திரையில் விளையாடுவது என்றாகிவிட்டது.
அப்படி வடிவேலு, விவேக் டீமில் தவிர்க்க முடியாதவராக இருந்தார் நெல்லை சிவா. 1952ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி கிராமத்தில் பிறந்த சிவா, பல போராட்டங்களுக்கு பிறகு பாண்டியராஜனின் முதல் படமான ஆண்பாவத்தில் தலை காட்டினார்.
அதன் பிறகு வெற்றிக்கொடிகட்டு, கண்ணும் கண்ணும், அன்பே சிவம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், கிரி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
"நானும் ரவுடி தான்" நெல்லை சிவா பொதுவாக ஒரு நடிகனின் உடல்மொழி பெரும்பாலும் கவனிக்கப்படும். ஆனால் நெல்லை சிவாவுக்கு திருநெல்வேலி மொழிதான் கவனிக்கப்பட்டது. தன்னுடைய வசனங்களில் நெல்லை தமிழை சரளமாக புழங்கினார்.
இவருக்கு முன்னும், பின்னும் நெல்லை தமிழ் பேசப்பட்டாலும் சிவா பேசிய பிறகுதான் நெல்லை தமிழ் ரசிகர்களுக்கு இயல்பாக சென்று சேர்ந்தது.
ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும், கிணற்றை காணும் என்று வடிவேலு புகார் அளிக்கும் நகைச்சுவை காட்சியில் சிவாவின் நடிப்பும், நெல்லை தமிழும் அவ்வளவு இயல்பாக விளையாடும்.
திருப்பாச்சியில் விஜய் உடன் நெல்லை சிவா சிவாஜிக்கு ஒருவர் ரசிகராக இருந்து நடிக்க வந்தார் என்றால் சிவாஜியின் நடிப்பையே பிரதிபலிக்க நினைப்பார்கள். நெல்லை சிவாவும் சிவாஜியின் பரம ரசிகர்தான். ஆனால் தன்னுடைய இயல்பை அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி சமீப காலங்களாக சின்னத்திரை நாடகங்களிலும் நெல்லை தமிழோடு இறங்கியிருந்தார்.
அவ்வளவு பெரிய திரையிலிருந்து வந்திருந்தாலும் சின்னத்திரை கலைஞர்களிடமும் அக்கறை கலந்த உணர்வோடு நெல்லை சிவா இருந்தார் என அவருடன் பணியாற்றிய சின்னத்திரை கலைஞர்கள் கூறுகின்றனர். தனது தங்கை வீட்டில் தங்கியிருந்த சிவா, மாரடைப்பால் நேற்று (மே 11) உயிரிழந்திருக்கிறார்.
சிறிது புகழ் சேர்ந்தாலே சொந்த ஊரை மறந்துவிட்டு இருக்கும் பலருக்கு மத்தியில், தனது சொந்த ஊரை அடைமொழியாகவும், ஊரின் மொழியை வாய் மொழியாகவும் ஆக்கிக்கொண்டு வாழ்ந்தார் நெல்லை சிவா.
இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்