வானொலி வர்ணனையாளராக மிகவும் பிரபலமான ஆர்.ஜே பாலஜி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன் பின் எல்கேஜி சினிமா மூலம் கதநாயகனாக அறிமுகமானர்.
இந்நிலையில், தற்போது இயக்குநராகக் களமிறங்கியுள்ளார், ஆர்ஜே பாலாஜி. நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி, நயன்தாராவுடன் இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏழைக் குடும்பத்தில் தவித்து வரும் ஆர்ஜே பாலாஜிக்கு, அம்மன் உதவி செய்வது போன்று இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. ஆக்ஷன், காதல், எமோஷன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, முதல் முறையாக கடவுள் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழில் ஒரு அம்மன் படம் உருவாகி வருவதுடன், பக்தி, பேண்டஸி கலந்த பாணியில் நயன்தாரா நடித்திருப்பதால் இந்தப் படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நாளை (நவ. 14) காலை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. கடந்த சில நாட்களாக இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழுவினர் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஐபிஎல் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சமூகவலைதளத்தில் இந்த படம் குறித்தான வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
தற்போது இப்படத்தின் சினிபீக் எனப்படும் சில நிமிடக்காட்சிகள் நேற்றிலிருந்து படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த வகையில் இன்று (நவ. 13) மனோபாலா போலி கிறிஸ்தவ குருக்களை கலாய்க்கும் விதமாகவும் அதை நயன்தாரா தண்டிக்கும் விதமான சினி பீக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.