நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஆக.6) ஒன்பது முன்னணி இயக்குநர்கள் இயக்கிய 'நவரசா' ஆந்தாலஜி படம் வெளியாகிறது.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில், அமைதி உணர்வை மையமாக வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனை என் கல்லூரி நாள்களில் இருந்தே எனக்கு தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு நடிகராக, இப்போது தான் தன் பயணத்தை தொடங்கியுள்ளதாக என்னிடம் சொன்னார். அதனால் இப்படத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். நாங்கள் மூன்று நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம்.
கெளதம் மேனன் சிறந்த திரைப்பட இயக்குநர் என்பதால் படப்பிடிப்பில் நான் சந்திக்கும் அழுத்தங்களை புரிந்துகொண்டு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். படத்தின் முதல் பிரதியை மிகவும் ரசித்தார். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா கதாபாத்திரங்கள் படத்தில் மிகச்சிறந்த நண்பர்கள். திரையில் அவர்களது நட்பு மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. திரைக்கதை விவாதத்தின் போது, இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர்.
படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல் நிறைய காட்சிகள் உள்ளன. இருவருக்குமிடையே படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமான உறவு ஏற்பட்டுவிட்டது. படத்திலும் அது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: சிம்புவிற்கு காட்சிகளை காணொலி மூலம் விளக்கும் கெளதம் மேனன்