நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா, திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ’தூள்’ படம் மூலம் பிரபலமான இவர், இதுவரை ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, அவதிப்பட்டு வந்த இவர், இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து நடிகர் நாசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று காலை பரவை முனியம்மாவின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் மறைவு நடிகர் சமூகத்துக்கு மட்டுமன்றி, நாட்டுப்புற பாடகர்கள் சமூகத்துக்கும் பெரிய இழப்பாகும்.
அவர் திரையுலகில் சில காலங்கள்தான் நடித்தார் என்றாலும், பார்க்கும் அனைத்து நடிகர்களிடம் 'நல்லாயிருக்கியா ஐயா' என்று அன்புடன் விசாரிப்பார். அவர் சில மாதத்துக்கு முன்பு, வறுமையில் இருப்பது அறிந்து நடிகர் சங்கம் மூலமாகவும், பல்வேறு நடிகர்கள் தனிப்பட்ட முறையிலும் உதவினோம்.
இப்போது கிட்னி செயலிழந்து காலமாகி இருப்பது கேட்டு மிகவும் வருந்துகிறோம். ஒருவர் இந்த மணணுலகை விட்டு மறைந்தாலும், அவர் செய்த சாதனைகள் என்றுமே மறையாது. அப்படி நாட்டுப்புற பாடல்களில் பரவை முனியம்மா செய்த சாதனைகள் என்றுமே நிலைத்து நிற்கும். அவரது இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள் , உறவினர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பரவை முனியம்மா காலமானார்