வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் 'குட்டி ஸ்டோரி'. ஆந்தாலஜி வகையில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. தமிழில் முதன் முறையாக நான்கு இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி வகைமைத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குநர் நலன் குமாரசாமி நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, "பொதுமுடக்கம் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு முன்பாக இந்த வாய்ப்பு வந்தது. எனக்கும் அந்த புதிய படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய்சேதுபதியிடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன். அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார்.
மற்ற இயக்குநர்கள் குறிப்பிட்ட நாட்களில் அவர்களது பகுதிகளை முடித்துக் கொடுத்தனர். நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன். 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தது ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின் போது ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார். ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார். நாங்கள் நினைத்தது போலவே இந்த கதை வந்துள்ளது" என்றார்.