2009ஆம் ஆண்டு சமுத்திரகனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'நாடோடிகள்'. நட்பை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இதில் காட்சிப்படுத்தப்பட்ட காதலுக்கும் நட்பிற்கும் இடையே நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள் ரசிக்கும்படி அமைந்தன.
நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக நான்கு நண்பர்கள் தங்களது வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். விறுவிறுப்பாக உயிரோட்டமான காட்சிகளால் ரசிகர்களை பரவசப்படுத்தியது நாடோடிகள்.இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஒன்பது வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சசிகுமார்-அஞ்சலி காம்போ வைத்து இயக்கியுள்ளார் சமுத்திரகனி. முதல் பாகத்தில் நடித்த பரணி, விஜய் வசந்த் ஆகியோர், இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். புதியதாக அதுல்யா ரவி இணைந்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. "உனக்கு இருக்கிற வீரமும் வெறியும் எனக்கு இருக்கு.. இழக்கிறதுக்கு ஒன்னுமில்ல.. நின்னா நடக்கனும்.. விழுந்தா செத்துறனும்னு நினைக்கிறவன் நான்.. எவனா இருந்தாலும் முகத்திற்கு நேரா வா..!" எனும் சசிக்குமாரின் கம்பீரக் குரலோடு ஆரம்பிக்கிறது டீசர். அடுத்து துள்ளல் இசை பின்னணியில் அதிரடியான சண்டை காட்சிகள், விறுவிறுப்பான சேசிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பழைமையை பிடித்து தொங்கும் முரட்டுத்தனமான மனிதர்களுக்கும், உண்மைக்காக போராடும் தோழர்களுக்கும் இடையே நடக்கும் விசயங்கள், தற்கால அரசியல், இழக்கும் உரிமைகள், சாதிய முரண்பாடுகள் ஆகியவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது.