தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நா. முத்துக்குமார் - வட்டத்திற்குள் சிக்காமல் வரிகளால் தாகம் தணித்தவர் - தமிழ் சினிமா

பிறக்கும் உயிருக்கு, ‘பூமியிது புனிதம் இல்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது’ என அக்கறை காட்டி; ’பறிப்போமே சோள தட்ட புழுதி தான் நம்ம சட்ட’ என சிறுவர்களுடன் விளையாடி ’நாம் வயதுக்கு வந்தோம் இளைமைக்கு வந்தோம்’ என இளைஞர்களுடன் கொண்டாட்டம் நிகழ்த்தினார்.

namu
namu

By

Published : Aug 14, 2021, 12:18 AM IST

பாலிவுட், கோலிவுட் என எந்த திரைத்துறையிலும் நடிகர்களுக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருப்பது வழக்கம். அவரது பிறந்த நாளையோ இல்லை பட வெளியீட்டு நாளையோ ரசிகர்கள் கொண்டாடுவது இயல்பு.

ஆனால், தமிழ் சினிமாவில், நடிகர்களுக்கு எந்த அளவுமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியருக்கும் கொடுக்கப்படுவதுண்டு.

அந்த வரிசையில், நா.முத்துக்குமார் ஒரு சூப்பர் ஸ்டார். ஒரு நடிகர் தனது நடிப்பால், இயக்குநர் தனது இயக்கத்தால், இசையமைப்பாளர் தனது இசையால் ரசிகர்களிடம் நிலைத்திருப்பர். ஆனால், பாடலாசிரியர்கள் ரசிகர்களிடம் இயல்பாக நிலைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல.

அப்படி நிலைத்திருப்பவர் நா. முத்துக்குமார். சிறு பிள்ளை, சிறியவன், இளையவன், பெரியவன் என்ற மனிதனின் அத்தனை படிநிலைகளையும் தனது பேனாவால் அளந்து அனைவருக்குமான மொழிகளையும் அவர் கொண்டிருந்தார்.

நா.முத்துக்குமார் உயிரிழந்து ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால், அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், நினைவுநாளுக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஊடகங்களும் அவரை நினைவுகூர்கின்றன.

கண்ணதாசன், வாலிக்கு பிறகு அனைத்து தரப்பினரும் முத்துக்குமாரின் பேனா பிரசவித்த எழுத்துக்களை அள்ளி அணைத்துக் கொண்டனர். கேஷூவல் சட்டை, ஜீன்ஸ் போட்டுக்கொண்ட கண்ணதாசனும், வாலியுமாய், நூலகமுமாய் அவர் இருந்தார்.

சிந்தனையில் ஆழமும் கூர்மையும், எழுத்தில் உணர்வும் அனுபவமும், தோற்றத்தில் எளிமையும் ஊர்க்கார முகமும் என நா. முத்துக்குமார் அனைவரிடத்திலும் கலந்து போன அசல் சாமானியன்.

அவரது பாடல்கள், இலக்கியத்தின் உச்சாணி கொம்பில் நின்று ஆடாமல் ஒருவனுக்கு எட்டுகின்ற மரக்கிளை போலவும், அதிலிருந்து சொட்டும் மழை நீர் அவனுக்கு தாகம் தீர்ப்பதும் போல இருந்தன.

பிறக்கும் உயிருக்கு, ‘பூமியிது புனிதம் இல்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது’ என அக்கறை காட்டி; ’பறிப்போமே சோள தட்ட புழுதிதான் நம்ம சட்ட’ என சிறுவர்களுடன் விளையாடி ’நாம் வயதுக்கு வந்தோம் இளைமைக்கு வந்தோம்’ என இளைஞர்களுடன் கொண்டாட்டம் நிகழ்த்தினார்.

கொண்டாட்டத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ‘காதல் நீரின் சலனம், புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்’ என்று அவர்களுக்கு காதல் குறித்து பாடமும் எடுத்தார்.

பாடம் எடுத்த கையோடு, ’கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை ஆதிவாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை’ என இளைஞர்களுடன் கைகுலுக்கி; ’நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா மாதம் பன்னிரெண்டும் நட்பு இருக்கும்’ என நம்பிக்கை அளித்தார்.

நம்பிக்கை அளிப்பவர்களால் மட்டும்தான் ஆறுதலாய் இருக்க முடியும் என்பதற்கேற்ப, ’கலைந்திடும் கோலம் என்றபோதிலும் அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்’ என உறவுகளை பிரிந்தவர்களின் வலியை பங்குபோட்டு ஆறுதல் கொடுத்தார்.

இறுதியாக, ’அவனாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் இறுதி என்ன பிச்சைதான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும் புழுவுக்கு இரையாவான் வேறு என்ன’ என மனித வாழ்க்கையின் உண்மையை உணர்த்தியிருப்பார். இப்படி, ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்புவரை நிகழும் அத்தனையுடனும் அவர் எளிமையாக உடன் வந்திருக்கிறார்.

உலகத்திலேயே கடினமான விஷயங்களில் ஒன்று தற்கால சூழலுக்கு தகுந்தவாறு தன்னை தகவமைத்து வாழ்வது. அதற்கு முதலில் இளைஞர்களின் மன ஓட்டத்துடன் பழக வேண்டும். அதை தவறாமல் செய்த கலைஞர்களில் நா. முத்துக்குமாரும் ஒருவர்.

முக்கியமாக மக்கள் தன் எழுத்திலிருந்து அகலாமல் இருக்க எப்போதும் ஆக்டிவ் என்ற ஒரு வழியையும், தனது எழுத்துக்களுக்கான கச்சாப் பொருளை தன்னிலிருந்தும், பிறரை கவனித்து அதிலிருந்து எடுப்பதை ஒரு வழியாகவும் அவர் வைத்திருந்தார்.

நா. முத்துக்குமார் ஒரு பரிபூரணம். பரிபூரணங்களுக்கு ஆயுள் கம்மி. முத்துக்குமாரின் ஆயுள் தமிழ் இருக்கும் வரை நீளும் என்ற கிளிஷே கூற்றைவிட, அவர் இருந்திருந்தால் இன்னும் ஏராளமான விஷயங்களை எழுத்துகள் மூலம் கொடுத்திருப்பார் என்ற ஏக்கம் அனைவரிடத்திலும் இருக்கிறது.

சினிமா உலகில் ஒருவரை வட்டத்துக்குள் அடைக்கும் வேலை நடந்துகொண்டிருக்கும். ஆனால், எந்த வட்டத்திற்குள்ளும் நா. முத்துக்குமார் சிக்கவில்லை. எந்தத் திருப்பம் வந்தாலும் திரும்புவதற்கு அவர் தயங்கியதில்லை.

பணம், நேரம், உதவி, வேலை என அவர் வாழ்க்கையில் எதிலும் கணக்கு வைத்துக்கொண்டது இல்லை. ’வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா’ என்று அவர் எழுதியிருக்கிறார்.

அதுபோல் எந்த வட்டத்திற்குள்ளும் அவர் சிக்காமல் இருந்ததால் தான் அவரது வரிகள் மழை போல் இன்னமும் பலரின் தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றன...

ABOUT THE AUTHOR

...view details