மனிதனுக்குப் பயணங்கள் பல பாடங்களைக் கொடுக்கக் கூடியது. பயணத்தில்தான் பூமியின் புது வடிவமும், புதுப்புது மனிதர்களும் தோன்றி பெரும் நம்பிக்கையை விதைப்பார்கள். முக்கியமாக, அது தரும் அனுபவம் அலாதியானது. நா. முத்துக்குமார் பயணங்களின் காதலன். அவருக்குப் பல பாடங்களையும், பாடல்களையும் பயணங்கள் கொடுத்திருக்கின்றன. எப்போதும் உவமைகளையோ, வரிகளையோ வேற்று கிரகத்திலிருந்தோ, கற்பனைகளிலிருந்தோ அவர் எடுக்கவில்லை. பயணங்களிலும், அவை கொடுத்த அனுபவங்களிலிருந்துமே எடுத்து வைத்தவர் அவர்.
புத்தக காட்டில் நா. முத்துக்குமார் முத்துக்குமார் தீவிரமாக பயணப்படுபவர். கிடைக்கும் ஓய்வு நேரங்களிலெல்லாம் பயணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் அவர். தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் பயணம் குறித்து, “நிறைய பயணப்படு... பயணத்தின் ஜன்னல்கள்தான் முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். பயணத்தின் முக்கியத்துவத்தை தனது மகனுக்கும் கடத்த முயன்றிருப்பதன் மூலம் அவர் பயணங்களின் பெரும் காதலன் என்பது தெளிவாகிறது. அவரது பாடல்கள் பல பயணங்களாலும், அவரது சொந்த அனுபவங்களாலும் உருவானவை.
ஒருமுறை முத்துக்குமார், ஊட்டிக்குச் சென்றபோது அங்கிருந்த பேருந்தில் 'உள்ளத் தீ’ என்ற ஊரைப் பார்த்து, பெயர் புதிதாக இருக்கிறதே என்று அந்த ஊருக்கு பேருந்து பிடிக்கிறார். இருளில் இறங்கி டீ குடித்துவிட்டுப் பார்த்தபோது வந்த பேருந்து சென்றுவிட்டது. உடனே அருகிலிருந்த வீட்டில் நடந்தவற்றை கூறியபோது அவர்கள் அருகில் இருந்த ஒரு மலையைக் காண்பித்து அங்கு மேலூர் என்ற ஒரு ஊர் இருக்கிறது. அங்கு சென்றால் ஊட்டிக்குச் செல்ல ஜீப் வரும் என்று கூறுகிறார்கள்.
அதன்படி அவரும் இருளில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது ஒரு நிலவு தன்னை கவனிக்க யாருமே இல்லையென்றாலும் அந்த இரவுக்கும், பாதைக்கும் வெளிச்சத்தை பொழிந்துகொண்டிருக்கிறது. அவர் செல்லும் பாதைக்கும் அந்த வெளிச்சம் சொந்தமில்லை. இருப்பினும் இரவு மீதும், பாதை மீதும் அந்த நிலவுக்கு காதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை முத்துக்குமார் உணர்ந்து கொண்டார். யார் ஒதுக்கினாலும் ஒளி சிந்துவதுதானே நிலவின் வேலை, யார் ஒதுங்கினாலும் நினைவை சுமப்பதுதானே காதலின் வேலை?
அந்த அனுபவத்தை 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை' பாடலில் இப்படி வைக்கிறார்,
“காட்டிலே காயும் நிலவு கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை!
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியைப் பிடிக்க மின்மினிப்பூச்சிக்குத் தெரியவில்லை!”
இந்த வரிகளில்தான் அந்த ஒட்டுமொத்த பாடலின் ஜீவனுமே இருக்கிறது. அந்த ஜீவனை முத்துக்குமார் கற்பனையிலிருந்து உருவவில்லை. பயணம் கொடுத்த அனுபவத்திலிருந்து எடுத்து பாடலில் வைத்தார். அதனால்தான் அவரது பாடல்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன.
அதேபோல், காதல் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்’ என்ற பாடல் இன்றுவரை பல காதலர்களுக்கு நெருக்கமானது. அதில் அவர் எழுதிய ஒவ்வொரு வரியும் அனைத்து காதலர்களுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுப்பது.
இந்தப் பாடல் எழுதுவதற்காக, ஒரு நள்ளிரவில் அரசுப் பேருந்தில், திண்டிவனத்திற்கு பயணப்பட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பியபோது உணவுக்காக பேருந்தை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அவர் நின்று கொண்டிருந்தபோது, புளிய மரங்களில் மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்திருக்கின்றன. இதுவரை நிலவு மட்டும்தான் இலைக்கும், இரவுக்கும் ஒளி கொடுக்கும் என அனைவரும் எழுதிக் கொண்டிருந்த சூழலில், அந்தப் பாடலில், அவர் தான் பார்த்த அனுபவத்தை வைத்து, “நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும்” என்று எழுதினார்.
செல்வந்தர் வீட்டுப் பெண்ணான கதாநாயகி வீட்டைவிட்டு வெளியேறி வறுமை நிலையிலுள்ள கதாநாயகனுடன் இரவுநேர பேருந்தில் சென்றுகொண்டிருப்பாள். அப்போது, ”நான் நிலவைப்போல ஒளி தரமுடியாது. ஆனாலும் மின்மினிப் பூச்சியின் ஒளியிலும் இலை வாழத்தானே செய்கிறது” என்று அந்த வரியின் மூலம் காதலர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும், காதலின் மீதான நம்பிக்கையையும் அவர் கூறியிருப்பார்.
சிறு வயதில் அவர் பிறந்த கிராமத்தில் மின்சாரக் கம்பிகளில் மைனாக்கள் கூடு கட்டுவதைக் கண்டதை நினைவுப்படுத்தி அதே பாடலில், “மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்” என்று எழுதியிருப்பார். அந்த வரிகள் இனி எத்தனை யுகங்கள் கடந்த பின்னும் காதலர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கக் கூடியது.
பொதுவாக அவரைப்பற்றி பலர் சொல்வதுண்டு, காதல் பாடல் எழுத வேண்டுமென்றால் முத்துக்குமார் ஈசிஆர் பக்கம் சென்றுவிடுவார், மாஸ் பாடல்கள் வேண்டுமென்றால் அவர் ஆந்திரா பக்கம் சென்றுவிடுவார் என்று.
‘ரன்’ திரைப்படத்தில் அவர் எழுதிய "தேரடி வீதியில் தேவதை வந்தால்” பாடல் மிகப் பிரபலம். அதில், ‘ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ’ என்று ஒரு வரி எழுதியிருப்பார். அவரது ஐயர் நண்பனின் சகோதரி ஒருமுறை யாரும் இல்லாதபோது, முத்துக்குமாரை வீட்டுக்கு அழைத்து மீன் வாங்கிவரச் சொல்லி சமைத்திருக்கிறார். முத்துக்குமார் ஏன் என்று கேட்டபோது நான் ஒருவரை காதலித்துக்கொண்டிருக்கிறேன், அவருக்கு மீன் என்றால் பிரியம் அதனால் சமைக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அந்தச் சிறுவயது அனுபவத்தை ரன் திரைப்படப் பாடலில் முத்துக்குமார் வைத்திருக்கிறார்.
அதேபோல் ’வீரநடை’ படத்தில் இடம்பெற்ற ”முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவை பிடிச்சிருக்கு” என்ற அவரது முதல் பாடலில் ”நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம் பிடிச்சிருக்கு” என்ற வரியை, சிறு வயதில் தனது கிராமத்தின் குளக்கரையில் வாத்துகளின் கால் தடங்களை கவனித்ததால் எழுதியிருக்கிறார். இப்படி அவரது பல பாடல்கள் அவரின் பயணத்தாலும், சிறு வயது அனுபவத்தாலும், அவர் கவனித்ததாலும் உருவானவை.
அவரது பாடல்கள் இப்படி என்றால் அவரது கவிதைகளும், கட்டுரைகளும் வேறு ரகம். கவிஞர், எழுத்தாளர் நா. முத்துக்குமாரை பாடலாசிரியர் நா. முத்துக்குமார் என்ற பெயருக்குள் சுருக்கிவிட்டோமோ என்று தோன்றுகிறது. பொதுவாக ஆணாதிக்கம், பெண்ணியம் குறித்து பேசுபவர்கள் எல்லாம் உவமைகளையும், சம்பவங்களையும் அடுத்த வீட்டிலிருந்தே எடுப்பார்கள். ஆனால் முத்துக்குமார் மட்டும்தான், ”அம்மா கதவுக்கு பின்னிருந்துதான் இன்றுவரை பேசிக்கொண்டிருக்கிறார். அப்பாவும் கடைசி வரை மறந்தே போனார் தன் மனசுக்குள் தூரெடுக்க” என்று தனது ’தூர்’ கவிதையின் கடைசி வரியில் தனது தந்தையையும், தாயையும் வைத்து பெண்ணியம் பேசியவர். 21 வயதில் இப்படி எழுத தனி தைரியம் வேண்டும். அனைவருக்கும் அந்த தைரியம் இருக்காது.
அவர் எழுதிய ”வேடிக்கை பார்ப்பவன்” என்ற புத்தகத்தில் கடைசிவரை அவரையே அவர் வேடிக்கைப் பார்த்து எழுதியவர். முத்துக்குமாரைப் பொறுத்தவரை பயணங்களும், வேடிக்கைகளும் அவருக்கு முக்கியமானவை. அதனால்தான் முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களும், கவிதைகளும் இன்றுவரை உயிரோடு இருந்து கொண்டிருக்கின்றன. இனிவரும் காலங்களிலும் இருக்கப் போகின்றன. அடிக்கடி பயணங்கள் செய்து வேடிக்கைப் பார்க்கும் நா. முத்துக்குமார். இப்போதும் ஒரு ஏகாந்த பயணத்தை மேற்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது பயணங்கள் என்றுமே முடிவதில்லை. மிஸ் யூ நா. முத்துக்குமார்...