நா.முத்துக்குமார் இந்தப் பெயர் தமிழுக்கு ஆற்றியிருக்கும் ஆசுவாசம் அலாதியானது. உலக மொழிகளில் தமிழ் என்றுமே சிக்கலானது. ஓர் எழுத்து பிசிறினாலும், நாம் சொல்ல வரும் கருத்தோ, எழுத நினைக்கும் எழுத்தோ பிசகி, வேறு அர்த்தம் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட கடினமான மொழியை சாமானியனுக்கு அர்த்தம் பிசகாமல் புரியவைப்பது அவ்வளவு ஒன்றும் எளிதான விஷயமில்லை. அதை நா. முத்துக்குமார் மிக நேர்த்தியாக செய்தார். அவரால், உச்சக்கட்ட இலக்கியத்தையும், அழுக்கான அரசியலையும் சாமானியனுக்கு மிக எளிதாக புரியவைக்க முடியும். மனிதனின் உணர்ச்சிக்கும், உணர்வுக்கும் எப்போதும் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கும். அதிலும் தமிழன் எப்போதுமே உணர்ச்சியையும், உணர்வையும் போட்டு குழப்பிக் கொள்வான். அப்படிப்பட்ட தமிழனுக்கு உணர்ச்சி வேறு, உணர்வு வேறு என்று வேர்வரை சென்று பிரித்து காண்பித்தார் முத்துக்குமார்.
அவரால் ’மதுரைக்காக தண்டட்டி கருப்பாயி’ எழுத முடியும், திருச்சிக்காக ’தில்லை நகரா தேரடி தெருவா அங்கிருக்கா உன் வீடு சாரதாஸில் கூரப்பட்டு சேலை ஒன்னு வாங்கித் தருவேன் வெட்கப்பட்டு எனை தேடு’ எழுதவும் முடியும், சென்னைக்காக, ’வணக்கம் வாழ வைக்கும் சென்னை பிடிக்குதுன்னை’ எழுத முடியும், காஷ்மீருக்காக ’அல்லாவே எங்களின் தாய் பூமி’ எழுத முடியும், உலகத்துக்காக, ’அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்’ எழுதவும் முடியும்.
’காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்’. காதலில் பெரிது சிறிதுக்கு இடமே இல்லை என்பதை ஒருவரால் எளிதாக சொல்ல முடியுமா?... பெண்களின் கண்கள் வெள்ளைப் பூக்கள் என்று வர்ணித்து மை தீர்த்த கவிஞர்கள் சமூகத்தில், முத்துக்குமார் மட்டும்தான், கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா என்று கேட்டு கருப்பு பூக்களை பெண்களின் கண்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் ஏறத்தாழ 1,000 பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தப் பாடல்களில் எல்லாம் அவர் செலுத்திய பாய்ச்சல்கள் யாராலும் செய்ய முடியாதது.
பெண்ணியம் அருகே முதல்முதலாக சென்ற படம் ’தரமணி’. அதில் முத்துக்குமார் எழுதிய பாடல்கள் எல்லாம் வேறு தளம். “ஹே ஒரு கோப்பை வேண்டும் கொண்டு வா” பாடலில் ஒரு இறகெனவே வரும் மரணம் அதில் நான் பறந்திட துடித்தேனே என்ற வரியில் ஒரு வலி வாங்கிய மனதின் வழி எங்கு செல்ல துடிக்கும் என்பதை உணர்த்தியிருப்பார். அதே பாடலில், இந்த உலகமே தலை சுற்ற வைக்கும் மது குப்பியா என்று அவர் கேட்பதில், இவ்வுலகத்தால் ஏமாற்றப்பட்டவளின் வலியையும், பெண் என்பவள் ஆண் பார்வையில் மோக சதைதானா என்னை வெட்டி கூரிட குத்தி கிழித்திட விரல்கள் நீண்டிடுதே என்று சொல்வதிலும், ஒரு பெண்ணின் அறமான கோபத்தையும் எவ்வளவு ஆழமாக சொல்லியிருக்கிறார். அவரது வரிகளை உணர இலகுவான மனநிலையும், ஆழமான மனநிலையும் வேண்டும்.
நா. முத்துக்குமார் எப்போதும் தனக்கு முன் ஒரு திரையை போட்டுக்கொண்டு வாழ்ந்தவர். அந்தத் திரை மிக எளிதானது யார் வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் அதை விலக்கிக்கொண்டு உள் நுழையலாம். அதை அவர் தொந்தரவாக பார்த்ததே இல்லை.