சென்னை: உதயநிதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'சைக்கோ' படத்தின் டீஸர் வெளியீடு குறித்து படத்தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுவரை வரை இயக்கியுள்ள படங்களில் பாதியை, த்ரில்லர் பாணியில் உருவாக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் ஆகியோர் நடிப்பில் 'சைக்கோ' என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட்டை படத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்னும் நான்கு நாட்களில் 'சைக்கோ' டீஸர் வெளியாகவுள்ளது எனக் குறிப்பிட்டு ரத்தக் கறை படிந்த ஐந்து விரல்களை பதியவைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் கட்டைவிரல் வெட்டப்பட்டு தனியாக இருக்க, மீதமுள்ள நான்கு விரல்கள், நான்கு நாட்களில் டீஸர் வெளியீடு இருப்பதை அறிவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மேலும், முற்றிலும் அதிரவைக்கும் அனுபவத்தை தரும் விதமாக டீஸர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம். சைக்கலாஜிகல் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.