ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்த குமார். இவரின் முந்தைய படமான ‘மௌனகுரு’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் ‘மகாமுனி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமன் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
'மகாமுனி' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ?
மகாமுனி படத்தின் வேலைகள் ஜனவரி மாதம்தான் ஆரம்பமானது. விரைவில் ரிலீசாக உள்ளது. என்னை பொருத்தவரை இந்த படம் ஒரு 8 மாத ப்ராஜெக்ட் தான். கதை நவம்பர் மாதம் கேட்டோம். ஜனவரியில் வேலைகளை தொடங்கிவிட்டோம். இயக்குநர் சாந்தகுமார் மட்டுமே 8 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டார். அவரை நாங்கள் ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தோம்.
'மகாமுனி' படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
மூன்று பாடல்கள் உள்ளது, படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால், மூன்று பாடல்களுமே கதையோடு இணைந்திருக்கும், கமர்ஷியலாக இருக்காது.
தமிழ் படத்திற்கும் தெலுங்கு படத்திற்கும் இசையமைப்பதில் உள்ள வித்தியாசங்களை எப்படி கையாளுகிறீர்கள் ?
தெலுங்கில் ஹீரோ ஓரியண்டட் படமாக இருக்கும். தமிழில் ஸ்கிரிப்ட் மற்றும் கமர்ஷியலாக ஓரியண்டடாகஇருக்கும். அதனால்தான் நான் தமிழில் கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து இசை அமைக்கிறேன். தெலுங்கில் கமர்சியல் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். இப்படித்தான் இரண்டு மொழிகளிலும் இசை அமைக்கிறேன். இரண்டு மொழி படங்களிலும் நான் நன்றாகவே பணியாற்றி வருகிறேன்.
தெலுங்கில் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள நீங்கள் தமிழில் குறைந்த அளவில் இசையமைக்க காரணம் என்ன?
சரியான வாய்ப்புகள் எனக்கு அமையவில்லை. நான் மிகச் சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.