தமிழ்நாட்டில் ககரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா பரவலை கட்டப்படுத்த தமிழ்நாடு அரசு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
கரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு உத்தரவையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நிவாரணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு பிரபலங்களும் பொதுமக்களும் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்திரையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் பிரபாஸின் சாஹோ படத்துக்காக உருவாக்கப்பட்ட தீம் இசையை ஏலம் விட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூகவலைதளப்பக்கத்தில், " 'சாஹோ' படத்தின் நாயகன் தீம் இசையை NFT ( Non-Fungible Token) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50 விழுக்காடு தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கும், மீதி 50 விழுக்காடு கரோனா பரவல் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களும் வழங்கப்படும்.
இதுதான் இந்தியாவில் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்டNFT ( Non-Fungible Token) முயற்சியாகும். இந்த இசைத் தொகுப்பை சாஹோ பட இயக்குநரைத் தவிர வேறுயாரும் கேட்டதே இல்லை. இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் படத்தின் காட்சி தன்மை கருதி அதற்கு வேறு வகையிலான இசை அமைப்பை செய்தோம். ஆகவே இந்த இசைய எங்குமே வெளியிடவில்லை.
NFT ( Non-Fungible Token) வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள் இந்த இசைத்தொகுப்பை உயரிய விலை கொடுத்து வாங்கலாம். இந்த இசைத் தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே உள்ளது. அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும். எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது" என பதிவிட்டுள்ளார்.