'யாரடி நீ மோகினி’, 'கேளடி கண்மணி' உள்ளிட்டதொலைக்காட்சித் தொடர்களில் நடித்த நடிகை வினிதா நாயகியாக அறிமுகமாகும் படம் 'முள்ளில் பனித்துளி'. இப்படத்தை டிரெண்ட்ஸ் மூவிஸ் சார்பில் இயக்குநர் ஜெகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புதுமுகம் நிஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படம் குறித்து படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெகன் கூறுகையில், ' முள்ளில் பனித்துளி, திருப்பூர் பின்னணியில் பெண்கள் படும் துயரங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்களைப் பற்றியும் உணர்வுப்பூர்வமாக தயாராகியிருக்கிறது.
நடுத்தர குடும்பங்களில் யதார்த்தமான வாழ்வியலை, வணிக சினிமா வரையறைக்கு உட்படாமல் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறேன். தற்கொலை குறித்து சமூகம் கொடுக்கும் அழுத்தங்களை, உளவியல் ரீதியாக கூறும் படமாக, இப்படம் உருவாகியுள்ளது.
எனக்கு ஏற்றுமதி தொழிலைத் தவிர, திரைப்படங்களை இயக்குவதில் விருப்பம் இருந்தது. அத்துடன் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை சினிமா போன்ற வலிமையான ஊடகத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, 'முள்ளில் பனித்துளி' திரைப்படத்தைத் தயாரிக்க முன் வந்தேன்.