வெற்றி நாயகனான முகேன் ராவ் - வெற்றிப் படத்தில் நடிக்கும் முகேன் ராவ்
சென்னை: முகேன் ராவை 'வெற்றி' கதாபாத்திரத்திற்கு எதேச்சையாகதான் தேர்ந்தெடுத்தோம் என இயக்குநர் அஞ்சனா அலி கான் தெரிவித்துள்ளார்.
நித்யா மேனன் நடிப்பில் உருவான 'வெப்பம்' படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது 'வெற்றி' என்ற தலைப்பில் ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
ஶ்ரீதி நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் முகேன் ராவ், அனு கீர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இது குறித்து அஞ்சனா அலி கான் கூறுகையில், "இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத சந்தோஷத்தை தந்திருக்கிறது.
'வெற்றி' படத்தின் திரைக்கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான, அதுமட்டுமல்லாமல் உணர்ச்சிபூர்வமானதும் கூட. ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும்.
வெற்றி என்பது கதாநாயகன் கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பதுதான். வாழ்வின் இடர்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனிதத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை.
முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு எதேச்சையாகதான் தேர்ந்தெடுத்தோம். அவர் தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுத்தனமாக இருப்பவர். தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். இப்பட குணத்துடன் ஒத்துப்போகக்கூடியவர்.
முகேன் ராவ் உணர்வுகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் எளிதாக கையாண்டுள்ளார். அனுகீர்த்தி, தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்.
மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, எடிட்டர் ஆண்டனி 'வெற்றி' படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி" என்று கூறினார்.