கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதியன்று மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதனாக பிறந்தவர் எம்.எஸ்.வி. நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு வளர்ந்த இவர், 50களின் பிற்பகுதிகளுக்குப் பின்னர் தமிழ் இசையுலகின் முடிசூடா மன்னனாக மாறியது தான் காலத்தின் கட்டாயம்.
90களில் பிறந்த பலருக்கும் இவர் நேரடியாக அறிமுகம் இல்லாவிட்டாலும், இவரின் இசையை ஏதோ ஒரு கட்டத்தில் கடக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். இது இவருக்கு மட்டுமல்ல, இளையராஜா போன்ற இன்றைய மூத்த இசையமைப்பாளர்கள் பலருக்கும் பொருந்தும். ஆனால், இளையராஜா ரத்தமும், சதையுமாக அடுத்த தலைமுறைக்கு சென்றடைந்துவிட்டார். எம்.எஸ்.வியும் சென்றடைந்தார், இசையமைப்பாளராக அல்ல... குணச்சித்திர நடிகராக. ஆம், காதல் மன்னன், காதலா காதலா உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருப்பார் எம்.எஸ்.வி. இப்படி நடிகராக மட்டுமே அவரை அறிந்திட்ட பலரும் இன்று அவரின் இசையை தான் தங்களின் பிளே லிஸ்ட்டில் வைத்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இளையராஜாவை கொஞ்சும் எம்.எஸ்.வி தமிழ் மொழியின் மீது தனக்கிருந்த ஆளுமையால், தான் வடித்த பாடல் வரிகளால், கவிதைகளால் இன்றும் நிலைத்திருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் இன்று தான் பிறந்தநாள். இவரின் பாடல் வரிகளும், எம்.எஸ்.வியின் இசையும் இணைந்த கிளாசிக் காம்போக்களின் லிஸ்ட் ஒரு கட்டுரைக்குள் அடங்காது.
இருப்பினும் சில தவிர்க்க முடியாத எவர்கிரீன் பாடல்கள் என்றால், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’, ‘பொன்மகள் வந்தாள்... பொருள்கோடி தந்தாள்’, ‘பாட்டுப் பாடவா’, ’உன் பொன்னான கைகள் புண்ணாகலாமா’, ‘மயக்கமா கலக்கமா’, ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’, ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’, ‘யாருக்காக இது யாருக்காக’ போன்ற பாடல்களை குறிப்பிடலாம். இவற்றுள் சில இன்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
சில இசையமைப்பாளர்களைப் புகழும்போது, இசையை மொழியாக்கும் வல்லமை இவருக்கு உண்டு என அவரது ரசிகர்கள் சிலாகிப்பதுண்டு. ஆனால், இசையை இசையாகவே கையாண்டவர்களில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவர் தான். இவரின் இசை ஆளுமையை கண்ணதாசன் ஒருமுறை இப்படி குறிப்பிட்டிருப்பார். “நானும், தம்பி விஸ்வநாதனும் விமானத்தில் பயணித்தபோது பொறியியல் துறை என்றால் பொறியல்களுக்கெல்லாமா அண்ணே துறை இருக்கும்? என்று கேட்டார். பின்னர், கஜினி முகமது குறித்த பேச்சு வந்தபோது, அவர் யாரு அண்ணே? என்றார். இப்படி எந்த விஷயம் குறித்த புரிதலும், அறிவும் அவருக்கு கிடையாது.
அப்போது, ‘செர்க்காஸ்கி’யின் இசை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த பியானோவில் தான் செர்க்காஸ்கி வாசித்தார் என காட்டியவுடன், எந்த நோட்ஸ் உதவியும் இன்றி அதில் அமர்ந்தவர், அரை மணி நேரம் இடைவிடாமல் வாசித்து அங்கிருந்த அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அந்த அரங்கில் இருந்தவர்கள் மிரண்டு போனார்கள். நோட்ஸ் உதவி இல்லாமல் செர்க்காஸ்கியின் இசையை இத்தனை துல்லியமாக யாராலும் வாசிக்க முடியாது என சிலாகித்தார்கள். அந்த அளவுக்கு தம்பி எம்.எஸ்.வியின் நாடி நரம்பெல்லாம் இசை. அவரின் எண்ண ஓட்டம் முழுதும் இசை. அதனால் தான் அவரால் சாதிக்க முடிகிறது” என என்றோ நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்திருப்பார்.
இப்படி, இசையோடு ஒன்றி வாழ்ந்த விஸ்வநாதனுக்கு, 2012ஆம் ஆண்டு ’திரை இசைச் சக்கரவர்த்தி’ என்ற சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.
இசை மட்டுமின்றி, தன் குரல் வளத்தாலும் பல்லாயிரக்கணக்கானோரை கட்டிப்போடத் தவறாதவர் எம்.எஸ்.வி. சங்கமம் படத்தை இவரின் குரல் தான் முடித்து வைத்திருக்கும். ‘மழைத்துளி மழைத்துளி’ பாடல் என்றவுடன் இவரின் குரல் தான் அனைவரின் நினைவிலும் எழும். ரஹ்மானின் இசையையும், வைரமுத்துவின் வரிகளையும் இவரின் குரல் விழுங்கியிருக்கும், காணாமல் போகச் செய்திருக்கும். ஏனெனில், அவர்களுக்கெல்லாம் அப்பன் அவர்! ‘ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!
புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!
போர்க்களம் நீ புகும்போது - முள்
தைப்பது கால் அறியாது!
மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?
கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!’ என்ற வரிகளுக்கு எம்.எஸ்.வி கொடுத்த உயிரில் தான் அவை இன்றும் சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. சுவாசிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன!
எந்தத் துறையானாலும், அதில் காலத்திற்கு ஏற்ப தங்களைத் தாங்களே அப்டேட் செய்துகொண்டிருப்பவர்கள் மட்டுமே நிலைக்க முடியும். வரலாறும் இதைத்தான் உணர்த்துகிறது. அப்படி காலத்திற்கேற்ப தன்னைத் தானே அப்டேட் செய்து கொண்டவர்களில் முக்கியமான ஒருவர் வாலி. அதனால் தான் அவரால் எம்ஜிஆர், சிவாஜிக்கும் பாட்டு எழுத முடிந்தது. சிவகார்த்திகேயனுக்கும் எழுத முடிந்தது. அப்படி பாடலாசிரியராக கோலோச்சிய வாலியின் வாழ்வில் ஒளி ஏற்றியவரும் எம்.எஸ்.வி தான் என அவரே கூறியிருப்பார்.
‘எம்.எஸ்.வி-யை பார்க்காத வரை எனக்கு சாப்பாடு இல்லை; அவரைப் பார்த்த பிறகு சாப்பிடுவதற்கே நேரம் இல்லை’ - எம்.எஸ்.வி குறித்து வாலி உதிர்த்த வார்த்தைகள் இவை!
இப்படி இசையின்பால் தான் கொண்ட காதலை வைத்து மக்களை மகிழ்வித்த மெல்லிசை மன்னரின் புகழ் அவ்வளவு எளிதில் மங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அவரின் இசையை ரசித்தவர்களுக்கும் இருக்கிறது, அவரிடம் இசை பயின்றவர்களுக்கும் இருக்கிறது. ‘கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!’