சென்னை: ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் மெரினா புரட்சி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக திகழும் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நிகழ்ந்தது.
தலைநகர் சென்னையில் உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் வயது வித்தியாசம் பார்க்காமல் போராட்டம் நடத்தினர். இளைஞர்களின் தன்னெழுச்சியால் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தைப் புரட்சி, மெரினா புரட்சி என்று தமிழர்கள் பெருமையாக கூறிய நிலையில், அதே ஆண்டு சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மெரினா புரட்சி என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ் தயாரித்து இயக்கியுள்ளார்.
படத்துக்கு சென்சார் அளிப்பதில் பிரச்னை எழுந்த நிலையில், தற்போது அதுவும் தீர்க்கப்பட்டது. இதையடுத்து மெரினா புரட்சி படத்தின் ட்ரெய்லரை விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் சமுத்திரகனி, நடிகர் சூரி ஆகியோர் வெளியிட்டனர்.
உலகப் புகழ் பெற்ற நார்வே திரைப்படவிழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட இந்தப் படம், பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
அத்துடன் கொரிய தமிழச் சங்கத்திலும் இந்தப் படம் கவுரவிக்கப்பட்டுள்ளது.