தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களின் கொண்டாட்டத்தை பெட்டிக்குள் முடக்கிய கரோனா... புதிய பட ரிலீஸ் பரிதாபங்கள் - மாஸ்டர்

கரோனா வைரஸ் மட்டும் வரமால் இருந்திருந்தால் சினிமா காதலர்களுக்கு கொண்டாட்ட மாதமாக ஏப்ரல் அமைந்திருக்கும். ஆனால் தற்போது கடந்த கால நினைவுகளோடும், அவ்வப்போது நிகழ்கால நிஜங்களோடும் மாறி மாறி பலரும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

master
master

By

Published : Apr 14, 2020, 11:32 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளுடன் இந்தியாவும் கடும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றது. கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் சமூக இடைவெளி முக்கியம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மக்கள் கூட்டம் அதிகம் கூடும் விளையாட்டு போட்டிகள், கேளிக்கை சம்மந்தமான அனைத்து விஷயங்களுக்கு உலகம் முழுவதும் தடை விதிக்கப்படிருக்கிறது.

தற்போது இவை அனைத்தும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்த ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதால். உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பலவற்றின் ரிலீஸும் தமாதமாகியுள்ளது.

இதனிடையே டிக்கெட் புக்கிங் நாளை எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அவர்களை மகிழ்விக்கும் விதமாக கடந்த நூற்றாண்டின் சிறந்த டிவி தொடர்களையும், திரைப்படங்களையும் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. இதைப் பார்த்து பழைய நினைவுகளில் சற்று அசைபோடும் அனைவரும், நிகழ்கால சம்பவங்களிலும் ஆஜராகி தொடர்ந்து தங்களது பேவரிட் படம் குறித்த எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நேரம் இந்த கரோனா வைரஸ் மட்டும் வராமல் இருந்திருந்தால் சினிமா காதலர்களுக்கு கொண்டாட்ட மாதமாக இந்த மாதம் இருந்திருக்கும். திட்டமிட்டிருந்தபடி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் இம்மாதத் தொடக்கத்தில் வெளியாகியிருந்தால், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சிலிர்த்துபோய் சில்லறைகளை விட்டெறிந்திருப்பார்கள். கரோனா காரணமாக அப்படி வெளியீட்டு தேதி தள்ளிப்போன சில படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்...

மாஸ்டர்

லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். மார்ச் 15ஆம் தேதி இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை அறிவித்திருந்தனர். மார்ச் 22ஆம் தேதி ட்ரெய்லர், ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியீடு என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்க, மார்ச் 24ஆம் தேதியிலிருந்து நிலைமை தலைகீழாக திரும்பியது.

மாஸ்டர் படத்தில் பணியாற்றிய இயக்குநரும், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்திருக்கும்" என்று கொளுத்திப் போட்டார்.

அதில், "இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு, அதன் பின்னர் போராட்டம், வருமானவரித் துறையினரின் சோதனை, இப்போது இந்த சூழல்நிலை என பல சிரமங்களை படம் சந்தித்து வருவதை பார்க்கையில் ஒரு ரசிகனாக மிக வருத்தமாக உள்ளது. இருப்பினும், எங்களிடம் கடைசி வரை சிரிப்பு இருக்கும். வாழ்வதுதான் முக்கியம் அடுத்து தான் கொண்டாட்டம் என #masterfdfs என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டார்.

மாஸ்டர்

இவரின் இந்தப் பதிவு காட்டுத்தீயாய் ரசிகர்கள் மத்தியில் பரவ, #masterfdfs ஹேஷ்டாக்கை டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டனர். மாஸ்டர் படம் மட்டும் இன்று வெளியாகியிருந்தால் இந்நேரம் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு சமூகவலைதளத்தில் 'மெர்சல்' பண்ணியிருப்போம் என ரசிகர்கள் பதிவிட, அது வழக்கம் போல் விஜய் - அஜித் ரசிகர்களுக்கிடையே போரில் வந்து முடிந்தது.

போரில் யார் அடிச்சு செத்தா என்ன, நாங்க வழக்கம் போல் மீம்ஸ் போட்டு கலாய்ப்போம் என்று மீம் கிரியேட்டர்கள் மாஸ்டர் படம் குறித்து மீம்களை பதிவிட்டு வைரலாக்கினர்.

இருப்பினும் மனம் தளராத விஜய் ரசிகர்கள், படம்தான் தள்ளிப்போனது, அட்லீஸ்ட் ட்ரெய்லரை வெளியிடுங்க என்று கோரிக்கை மனுக்களை ட்விட்டரில் பார்சல் செய்தனர். இதற்கு ஆறுதலாக படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

உயர் பிழைப்பதுதான் முதன்மையானது. கொண்டாட்டம் அதற்கு அடுத்துதான். மாஸ்டர் சரியான நேரத்தில் எழுச்சியுடன் வருவார் என்ற ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் ட்ரெய்லர் பற்றி தற்போது வரை எந்தத் தகவலும் வராதது ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா பிரியர்களையும் கைபிசைய வைத்துள்ளது.

83

1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 83. இந்தப் படத்தில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவ் மனைவி கேரக்டரில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடிய வீரர்களின் ஒருவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

83

கபீர் கான் இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருந்தது. ஃபர்ஸ்டலுக்கை தவிர டீஸர், டிரெய்லர் என எதுவும் வெளியிடப்படவில்லை. நிஜத்தில் நடந்ததை ரீலில் காட்டுவதில் ஆர்வம் காட்டி வரும் பாலிவுட்காரர்கள், ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி அந்தத் தருணத்தை திரையில் பார்த்து மெய்சிலிர்க்க தயாராகியிருந்த வேளையில் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது.

இந்தியில் உருவாகியிருக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழில் படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் வெளியிடுவதாக அறிவித்தார். ஊரடங்கு, கரோனா பீதிகளுக்கிடையே இந்தப் படத்தின் ட்ரெய்லரையாவது வெளியிட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நோ டைம் டூ டை

உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் பட வரிசையில் 25ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் நோ டைம் டூ டை . இந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போதைய ஜேமஸ் பாண்டான டேனியல் கிரேக், பாண்டாக நடித்துள்ளார். இது அவரின் ஐந்தாவது பாண்ட் படமாகும்.

நோ டைம் டூ டை

அனல் பறக்கும் ஆக்‌ஷன், அட்டகாசமான சேசிங் காட்சிகள், பிரமிப்பை ஏற்படுத்தும் தொழில் நுட்பம், அசரடிக்கும் கதாநாயகிகள் என்று முழு பேக்கேஜாக உருவாகியிருந்த நோ டைம் டூ டை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது பாண்ட் ரசிகர்களைத் தாண்டி பலருக்கும் ஏமாற்றமே!

இதனிடையே ரசிகர்கள் படத்தின் ட்ரெய்லரை ரிப்பீட் மோடில் பார்த்து, ஷேர் செய்து பொழுதைப் போக்கி வருகிறார்கள்.

நிசப்தம்

சைலன்ஸ்

ரெண்டு படத்துக்குப் பிறகு அனுஷ்கா - மாதவன் இணைந்து நடித்து சைலன்ட் திரில்லராக உருவாகியுள்ள படம் நிசப்தம். இடையில் காணாமல் போயிருந்த அனுஷ்கா, குறுகிய இடைவெளிக்கு பிறகு சாக்‌ஷி என்ற கதாபாத்திரத்தில் வாய்பேச முடியாத ஓவியராக நடித்துள்ளார். அஞ்சலி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ளார். சைலன்ஸ் என்ற பெயரில் தமிழில் இந்தப் படம் வெளியாவதாக இருந்த நிலையில், அனஷ்காவை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் கரோனா பீதி காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிளாக் விடோ

மார்வேல் பட வரிசையில் முதல் பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம் இந்த ப்ளாக் விடோ. ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் கேட் ஷார்ட்லேண்ட் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது. பிளாக் விடோ.

ப்ளாக் விடோ

அவெஞ்சர் சீரிஸ் படங்களில் தோன்றும் பிளாக் விடோ கதாப்பாத்திரத்தின் பின்னணியை விளக்கும் படமான இதன் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து, படம் மீதான எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தில் ப்ளாக் விடோ கதாப்பாத்திரம் உயிரிழந்துவிடுவதாக காட்டியிருப்பார்கள். இதனால் பிளாக் விடோ ரசிகர்கள் பெரிதும் அப்செட்டாகினர். இதையடுத்து அவர்களை மகிழ்விக்கும் விதமாக ப்ளாக் விடோ கேரக்டரின் கதையை விவரித்து அதே பெயரில் படத்தை எடுத்துள்ளனர், அந்த வகையில், ப்ளாக் விடோவாக தோன்றி ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த ஸ்கார்லெட் ஜோஹன்சனை இந்தக் கேரக்டரில் பார்க்க போவது கிட்டத்தட்ட இதுவே கடைசி முறை என ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தின் டிக்கெட் ரிசர்வேஷனுக்காக காத்திருந்த வேளையில், மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படமும் கரோனாவுக்கு பலியானது.

ஆம் பிளாக் விடோ மே 1ஆம் தேதிக்கு பதில் ஐந்து மாதங்கள் கழித்து நவம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது டிஸ்னி அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details