மலையாளத்தில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். மோகன்லாலுடன் மீனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அப்போது, இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்திலும் இணைந்தது.
கரோனா அச்சம் காரணமாக, திரையரங்கு வெளியீட்டை தவிர்த்து ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் 'த்ரிஷ்யம் 2', பிப்ரவரி 19ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் மோகன்லாலின் படம் நேரடியாக டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியானது என்ற பெருமையை த்ரிஷ்யம் 2 பெற்றது.
முதல் பாகத்தின் முடிவிலிருந்து இரண்டாம் பாகத்தை இயக்குநர் தொடங்கினார். இதனால், 'த்ரிஷ்யம் 2' படம் சமூகவலைதளங்களில் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமூகவலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் படத்தின் கதை, திரைக்கதை குறித்து சிலிர்ப்புடன் பகிர்ந்தனர்.
இந்நிலையில், முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தைப் போன்று, இரண்டாம் பாகம் தற்போது தெலுங்கில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் உருவாகி வருகிறது. இதனையடுத்து இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோ வாங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " த்ரிஷ்யம் 2 வெற்றியைத் தொடர்ந்து அந்த கதை மற்ற மொழிகளிலும் அதே அளவு அர்ப்பணிப்புடன் உணர்ச்சியுடன் சொல்லப்பட வேண்டுமென தயாரிப்பாளர்களாக எங்களுக்கு பொறுப்பு உள்ளது" என்றார்.
இந்த படத்தின் ரீமேக் கூறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில், " த்ரிஷ்யம் 2 படத்தின் கதை மக்களிடையே வெகுவாக சென்று சேர்ந்திருக்கிறு. அதன் இந்தி ரீமேக்கின் மூலம் இன்னும் பெருவாரியான ரசிகர்களுக்கு பனோரமா ஸ்டூடியோஸ் அதை கொண்டு சேர்ப்பார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.
விரைவில் இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை, துணை கதாபாத்திரங்கள், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.