ஹைதராபாத்:த்ரிஷ்யம் 2 படம் விரைவில் வெளியாகிவுள்ள நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.
த்ரிஷ்யம் 2 படம் தொடர்பான பேட்டி ஒன்றில் நடிகர் மோகன்லாலிடம், நடிப்பது என்பது வெறும் வேலை, இனிமேல் உற்சாகப்பட அதில் எதுவுமில்லை என்று உணர்வு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், "என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். நடிகர்களான நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் புதிய ஆடை, வசனம், நம்பமுடியாத விஷயங்கள், பாடல், சண்டை என பல விஷயங்கள் எங்களது வாழ்க்கையில் நிகழ்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் அழகியல் நிறைந்ததாகவே உள்ளது.
சினிமா என்பது எனக்கு வழங்கப்பட்ட வேலை. அதை ஏன் நான் செய்ய வேண்டும் என்று என்றைக்கு நான் நினைக்கிறேனோ, அன்று நான் நடிப்பதை நிறுத்திவிடுகிறேன். இதைச் சத்தியமாக சொல்கிறேன்" என்றார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக த்ரிஷ்யம் 2 உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததுடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தில் இருந்தது போன்ற திரில்லர் இரண்டாம் பாகத்திலும் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பிப்ரவரி 19ஆம் தேதி நேரடியாக ரிலீஸாகிறது.
இதையும் படிங்க: என் அழகை அட்ஜெஸ்ட் செய்யுமாறு சொன்ன இயக்குநர் - பிரியங்கா சோப்ரா பகிர்வு