கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கபட்ட தேசிய ஊரடங்கால் மலையாள நடிகர் மோகன்லால் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். அங்கிருந்து அவர் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே ஷைலஜா, கேரளா முழுவதும் இருக்கும் 250 சுகாதாரப் பணியாளர்கள், நிபுணர்களுடன் உரையாடி அவர்களின் சமூக சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த உரையாடலில் மோகன்லால் கரோனா தொற்று தடுப்புக்கு அயராது பணியாற்றும் பணியாளர்களுக்கு பாட்டு பாடியுள்ளார். 1972 ஆம் ஆண்டு ஏ.பி. பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான 'சினேஹதீபமே மிழி துரக்கு' என்ற படத்தில் இடம் பெற்ற பாடலான 'லோகம் முழுவன் சுகம் பகிரானாய் சினேஹதீபமே மிழி துரக்கு' என்ற பாடலை மோகன்லால் பாடினார்.
தங்களது கஷ்டங்களை மறந்து சமூகத்திற்காக உயர்ந்த சேவையாற்றி வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் நன்றி தெரிவித்த அவர், வரும் நாட்கள் மாநிலத்துக்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.