இந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என அனைவராலும் அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பி.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி.,க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நல்லபடியாக தேறி வந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
ட்விட்டரில் நினைவுகூர்ந்த மோகன்லால், மம்மூட்டி
அவரது மறைவையொட்டி பல மாநில நடிகர், நடிகைகளும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கேரள முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் எஸ்.பி.பியின் மறைவு குறித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பாடகர் எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்து மோகன்லால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அவரது சொர்க்கம் போன்ற இணையற்ற குரல் நமது உள்ளங்களில் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை நினைவுகூர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மோகன்லாலின் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், தொடர்ச்சியாக தங்களது இரங்கலைத் தெரிவித்து வந்தனர்.